தேவனோடு சஞ்சரித்த நோவா(Noah walked faithfully with God):-

ஆதி 6:9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/E-ZZ0HtOocg

ஏனோக்கின் மகன் மெத்தூசலா. ஏனோக்கு தேவனோடுகூட சஞ்சரித்தவன். மெத்தூசலாவின் பேரன் தான் நோவா. நோவா சுமார் 600 வருடங்கள் மெத்தூசலாவிடம் வாழ்ந்தான். ஆகையால் நோவா பலமுறை அவனுடைய தாத்தா மெத்தூசலாவிடம், ஏனோக்கு எப்படி கர்த்தாரோடுகூட சஞ்சரித்தான் என்பதை கேட்டறிந்திருக்க கூடும். அதனிமித்தம் நோவாவுக்கு ஆண்டவரோடுகூட சஞ்சரிக்கவேண்டுமென்ற வாஞ்சை இருந்தது. அந்த வாஞ்சையினிமித்தமாக ஆண்டவர் நோவாவிற்கு அவர் பூமியை எதினால் நியாயந்தீர்க்கப்போகிறார் என்பதை வெளிப்படுத்தினார்.

ஆண்டவர் கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு என்று நோவாவிடம் சொன்னார். கர்த்தர் சொன்னபிறகரமாக அப்படியே நோவா செய்துமுடித்தான். ஏன், எதற்கு என்று அவன் கேட்க்கவில்லை. அந்த பேழையை உண்டாக அநேக செலவுகள் ஆகுமே அதற்கு நான் எங்கு போவேன் என்றெல்லாம் அவன் பேசவில்லை. மாறாக கர்த்தர் சொன்னதை அப்படியே செய்ய அவன் முன்வந்தான். இப்படித்தான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட, கர்த்தர் ஒரு காரியத்தை செய்ய சொன்னால், வீண் காரியங்களை சிந்திக்காமல், கேள்வி கேட்க்காமல் அப்படியே செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்படிப்பட்டவர்களிடம் கர்த்தர் மிகவும் பிரியமாக இருப்பார். நோவா அவனுடைய வருமானத்தில் அவனுடைய குடும்பத்தையும் பார்த்து, கர்த்தர் சொன்ன அந்த பெரிய பேழையையும் உண்டாக்கினான். கர்த்தர் சொன்ன காரியங்களை செய்வதற்கு, செலவு ஏற்படுமென்றால், அதை தாமே பொறுப்பெடுத்து, செலவு செய்து நிறைவேற்ற கர்த்தருடைய பிள்ளைகள் முன்வர வேண்டும். நோவா அந்த பேழையை செய்ய அநேக மணிநேரங்கள் செலவளித்திருப்பான், அநேக கண் விழிப்புகள் இருந்திருக்கும், கடினமான வேலை இருந்திருக்கும். இருந்தாலும் கர்த்தர் சொன்ன வார்த்தையினிமித்தம் எல்லாம் பாக்கியமாக கருதி உழைத்தான். இப்படி தான் நாமும் எல்லாவற்றிற்கும் துணித்து, கர்த்தருடைய வேலையை செய்வது கர்த்தர் கொடுத்த சிலாக்கியம் என்று எண்ணி வேலை செய்யவேண்டும். உங்களை கர்த்தர் நோவாவை போல எடுத்து பயன்படுத்தமுடியும்.

பேழையை நோவா செய்துகொண்டிருக்கும்போது அநேகர் கேட்டிருக்கலாம், எப்படி அனைத்து மிருகங்கள், விலங்குகள், பறவைகள் இந்த பேழைக்குள் வரும் என்பதாக. நோவாவிற்கு தெரியும் அதை கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார் என்று. நோவா கர்த்தர் சொன்னதை மாத்திரம் செய்தான். மற்றதை கர்த்தரிடம் விட்டுவிட்டான். நாமும் கர்த்தர் சொன்ன காரியத்தை மாத்திரம் செய்துவிட்டு, மீதியான காரியங்களை கர்த்தரிடமே விட்டுவிட வேண்டும். எல்லா உயிரினங்களும் பேழைக்குள் சென்றபிறகு அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார் என்று வசனம் சொல்லுகிறது. இப்படி தான் கர்த்தர் இப்பொழுது நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் இரட்சிப்பு என்னும் கதவை கடைசிநாட்களில் அவரே அடைக்கிறவராக இருப்பார். அதற்குள்ளாக நாமும் நம்முடைய பாவங்களிலிருந்து மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டு, அநேகரை இரட்சிப்பிற்கேற்ற வழியில் நடத்தவேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடைகிறவராக இருக்கிறார்.

கர்த்தர் பூமியின் மீது மழையை பெய்ய செய்து சகல உயிரினங்களையும் அழித்துப்போட்டார். தண்ணீர் வற்றிய பிறகு நோவா பேழையை விட்டு வெளியே வந்து அவன் முதன் முதலாக செய்த காரியம் அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான் (எபி 11:7).

நோவாவைப்போல கர்த்தாரோடுகூட சஞ்சரிக்க கற்றுக்கொள்ளுவோம். அப்பொழுது கர்த்தர் நம்மை கொண்டு பெரிய காரியங்களை செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org