ஒரு மரம் (A Tree).

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான், அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார், அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே,     அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு,     அங்கே அவர்களைச் சோதித்தார்(யாத். 15:25).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7QOUJVcoc4k

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு,     செங்கடலைக் கடந்து இக்கரைப்பட்ட பின்பு சூர் வனாந்தரத்தில் மூன்று நாட்கள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவில் வந்தபோது அங்கே தண்ணீர் காணப்பட்டது,     ஆனால் அந்த தண்ணீர் கசப்பாயிருந்தது. ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து என்னத்தைக் குடிப்போம் என்று கேட்டார்கள். மோசே ஒரு ஜெபவீரன்,     அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை அவன் வெட்டி,     தண்ணீரில் போட்டவுடன் அந்த தண்ணீர் மதுரமாயிற்று. அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தைக் கட்டளையிட்டு,     அவர்கள்  கீழ்ப்படிதலைச் சோதித்தார். கர்த்தருடைய நியாயத்தைக் கைக்கொண்டு  கீழ்ப்படிகிறவர்களுக்கு  எகிப்பதியருக்கு வரப்பண்ணின ஒரு வியாதியையும் வரப்பண்ணேன்,     நானே உங்கள் பரிகாரியாகிய கர்த்தர் என்ற வாக்குத்தத்தையும் கொடுத்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் வாழ்க்கையின் கசப்புகள் ஏதுவாயிருந்தாலும்,     முறுமுறுப்பதை நிறுத்தி விட்டு,     சிலுவை மரத்தில் உங்களுக்காய் தொங்கி ஜீவன் கொடுத்த ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அனேக வேளைகளில் நம்மைத் தாக்குகிற வியாதிகள்,     கஷ்டங்கள்,     பற்றாக்குறைகள்,     தரித்திரங்கள் நிமித்தம் நாம் முறுமுறுக்கிறவர்களாய் காணப்படுகிறோம். ஆனால் முறுமுறுப்பது எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. அது மேன்மேலும்  நம்மைப்  பாவத்தில் தள்ளுகிறதாயும்,     கர்த்தரை விட்டு தூரம் போகும் படிக்கும் செய்து விடும். அதற்குப் பதிலாகச் சிலுவை மரத்தை நோக்கிப் பாருங்கள்,     அதிலே நமக்காகத் தொங்கின ஆண்டவரை நோக்கிப் பாருங்கள்.  நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் முடிவு இயேசுவாய் காணப்படுகிறார். அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய அவர் வல்லவராய் காணப்படுகிறார். அவருடைய வார்த்தையை கைக்கொண்டு நாம் ஜீவிக்கும் போது அவர் நமக்கு யெகோவா ராஃப்பாவாக வெளிப்பட்டு நம்முடைய வியாதிகளுக்குப் பரிகாரியாய் காணப்படுவார். 


பின்பு,     கர்த்தர் இஸ்ரவேல்  ஜனங்களை ஏலிமுக்கு  அழைத்துக் கொண்டுவந்து இளைப்பாறச் செய்து மகிழப்பண்ணினார்,     அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தது,     அங்கே தண்ணீர்  அருகே பாளயமிறங்கினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     நம்முடைய கர்த்தர் மாராவை மதுரமாக்குகிறவர்,     கசந்து போன நிலைமையை மாற்றி நம்மை களிகூரப் பண்ணுகிறவர். உங்கள் மாராக்களைக் கண்டு சோர்ந்து போய் விடாதிருங்கள். மாராவின் பாதைகள் கர்த்தர் உங்கள் கீழ்ப்படிதலைச்  சோதிக்கிற நேரமாய் காணப்படுகிறது,     அவருடைய நியமங்களை உங்களுக்கு வெளிப்படுத்தி,     வாக்குத்தத்தங்களைத் தருகிற நேரமாய் காணப்படுகிறது. மாரா நிரந்தரமானதல்ல,     கர்த்தர் உங்களுக்கு ஏலிமை தந்து இளைப்பாறப்பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae