கிறிஸ்துவின் அன்பு (Love of Christ).

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ,     வியாகுலமோ,     துன்பமோ,     பசியோ,     நிர்வாணமோ,     நாசமோசமோ,     பட்டயமோ?  இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில்  அன்புகூருகிறவராலே  முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோமர் 8:36,    37).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KlErAp3ZodA

இயேசு கிறிஸ்துவின் அன்பு இரண்டு விதங்களில் வெளிப்பட்டது. ஒன்று அவருடைய உலகளாவிய அன்பு,     உலக ஜனங்கள் அனைவருக்கும் அது வெளிப்பட்டது. மெய்யாகவே அவர் ஜனங்களை சிநேகிக்கிறார். உலகத்தில் காணப்படுகிற அத்தனை ஜனங்களுக்காகவும் தன் ஜீவனைக் கொடுத்தார். ஆகையால் யோவான்ஸ்நானகன்  உலகத்தின்  பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி என்ற பெயரை  இயேசுவுக்குப் போட்டார். தேவன்,     தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்திய ஜீவனை அடையும் படிக்கு,     அவரைத் தந்தருளி,     இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்றும் வேதம் கூறுகிறது. அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி,     நீதியுள்ளவர்கள் மேலும்  அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.  ஆனால்,     உலகத்தில் காணப்படுகிற கோடிக்கணக்கான ஜனங்கள் இந்த அன்பிற்கு வெளியே இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பது தான் பரிதாபத்திற்குரியது. இரண்டாவது,     அவருடைய பிள்ளைகளுக்காக வெளிப்படுகிற அவருடைய அன்பு,     அவர்  தரமுடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே,     முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். கல்வாரியின் அன்பு மாறாதது,     நிலையானது,     மாயமற்ற ஸ்திரமான அன்பாய் காணப்படுகிறது. இயேசுவின் காயப்பட்ட கரங்களையும்,     கால்களையும்,     சரீரத்தையும் பார்க்கும் போது அவருடைய அன்பின் மேன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தை உணர்ந்த பவுல்,     மரணமானாலும்,     ஜீவனானாலும்,     தேவதூதர்களானாலும்,     அதிகாரங்களானாலும்,     வல்லமைகளானாலும்,     நிகழ் காரியங்களானாலும்,      வருங்காரியங்களானாலும்,     உயர்வானாலும்,     தாழ்வானாலும்,     வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்பதிலிருந்து அவரோடு நம்மையும் இணைத்துக் கூறுகிறதைப் பார்க்க முடிகிறது. பிசாசும்,     உலகமும் நம்மை இயேசுவின் அன்பிலிருந்து பிரிக்குப்படிக்கு  முயற்சிக்கும்,     பலவிதமான சோதனைகளையும்,     வேதனைகளையும்,     பண ஆசைகளையும்,     பொருளாசைகளையும்,     இச்சைகளையும் தூண்டி விட்டு கிறிஸ்துவின் அன்பை விட்டு சோரம் போகும் படிக்கு முயற்சி செய்யும். ஆனால் அவைகள் ஒன்றும் கிறிஸ்துவின்  அன்பை விட்டு நம்மைப் பிரிக்காது என்று நாமும் நிச்சயிக்கப்பட்ட ஜீவியம் செய்ய வேண்டும். பாலிகார்ப் என்பவரை அப்போஸ்தலனாகிய  யோவான்  சிமிர்னா சபையின் பிஷப்பாக நியமித்தார். பின்னாட்களில்  கிறிஸ்துவை மறுதலிக்கும் படிக்கு அந்நாட்களில் ஆட்சி செய்தி ரோம ஆட்சியாளர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் பாலிகார்ப்  நான் எண்பத்தாறு ஆண்டுகள் இயேசுவைச் சேவித்தேன்,     ஒருமுறை கூட எனக்கு அவர் கெடுதல் செய்ததில்லை,     அப்படிப்பட்ட அன்புள்ளவரை நான் தூஷிப்பதுமில்லை,     மறுதலிப்பதுமில்லை என்று உறுதியாகக் கூறினார். ஆகையால் நெருப்பினால் அவரை எரிக்கும் படிக்குக் கட்டளையிட்டார்கள். நெருப்பு அவரைச் சுட்டெரிக்காததின் நிமித்தம் ஈட்டியினால் குத்தி அவரைக் கொன்றார்கள். இயேசுவின் ரத்த சாட்சியாய் அவர் மரித்தார்.  கர்த்தருடைய பிள்ளைகளே,     கிறிஸ்துவின் அன்பை விட்டு ஒன்றும் என்னைப் பிரிக்காது என்ற உறுதியான நம்பிக்கையோடு ஜீவிக்கக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை பாராட்டுவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae