ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு (A Time for everything).

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். பிரசங்கி 3:1,11.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wQbu5Z-EjVU

பிரசங்கி சாலொமோன் ராஜாவால் எழுதப்பட்டது. அவன் வானத்தின் கீழ் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் ஞானமாய் விசாரித்து, கவனித்துப் பார்த்து எழுதியது. அப்படி ஆராய்ந்து அறிந்ததில் ஒருகாரியத்தைக் கண்டுபிடித்தான், கர்த்தர் ஒவ்வொன்;றிற்கும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் அந்த குறிப்பிட்ட காரியத்தை கர்த்தர் நேர்த்தியாய் செய்கிறவர். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியங்களுக்கும் கர்த்தர் ஒரு காலத்தையும் சமயத்தையும் வைத்திருக்கிறார். ஏற்ற வேளையில் கர்த்தர் உங்களுக்காக நியமித்ததை நேர்த்தியாக செய்து முடிப்பார். சோர்ந்து போகாதிருங்கள்.

கர்த்தருக்கு யாரும் ஆலோசனை கொடுக்கமுடியாது. அவரை துரிதப்படுத்தமுடியாது. அவருடைய நேரம் சரியானது.  அவருக்குப் பிரியமானதை அவருடைய வேளையில் செய்கிற தேவன். ஏசாயா 55:8,9-ல் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல வென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. உங்களைக் குறித்து கர்த்தர் கொண்ட நினைவுகள் உயர்ந்தது. அது உங்களுக்கு ஆசிர்வாதமானது. ஏற்றக் காலத்தில் கர்த்தர் உங்களை உயர்த்தும் படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள். அப்போது அவருடைய மகிமையை நீங்கள் காண்பீர்கள்.

அனேக நேரங்களில் கர்த்தருடைய வேளைக்காய் நாம் காத்திருப்பதில்லை. ஆபிரகாமை அழைத்த தேவன் நான் உனக்கு ஒரு குமாரனை தருவேன் என்றும் வாக்களித்தார். ஆனால் வாக்குத்தத்தத்தின் குமாரனைப் பெற்றெடுக்கும் மட்டும் ஆபிரகாமால் காத்திருக்கமுடியவில்லை. ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெற்றெடுத்தான். இஸ்மவேலின் சந்ததிகள் மூலம் வாக்குத்தத்தத்தின் சந்ததி இன்றும் வேதனைகளைச் சகிக்கிறது. இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், சாமுவேல் தீர்க்கதரிசியின் வருகைக்காய் ஏழுநாட்கள் காத்திருக்கமுடியவில்லை. ஜனங்கள் தன்னை விட்டு பிரிந்து செல்லுவதன் நிமித்தம், அவர்களைப் பிரியப்படுத்துவதற்காக, அவனே துணிந்து சர்வாங்கதகனப்பலியை செலுத்தினாhன். அதனிமித்தம் ராஜ்யபாரத்தை இழந்துபோனான். கானாவூர் கலியாண வீட்டிலும் கூட இயேசு சொன்னார் என் வேளை இன்னும் வரவில்லை. அவருடைய வேளை வந்தவுடன் தண்ணீர் அதிக சுவையுள்ள திராட்சைரசமாக மாறினது. கர்த்தருடைய பிள்ளைகளே, அவருடைய வேளைக்காய் காத்திருங்கள். பொறுமையை இழந்து விடாதிருங்கள். அவருடைய வேளை வருகிறது. உங்கள் வாழ்க்கையில் நேர்த்தியான அற்புதங்கள் வெளிப்படப்போகிறது.

யோசேப்பின் அரிக்கட்டு நிமிர்ந்து நிற்கும் என்று சொப்பனத்தில் கர்த்தர் வெளிப்படுத்தினார். சூரியனும் சந்திரனும் 11 நட்சத்திரங்களும் உன்னை வணங்கும் என்றும், அவனுடைய சகோதரர்களும் பெற்றோர்களும் அவனை வணங்குவார்கள் என்று வெளிப்படுத்தினார். அனேக உபத்திரவங்களைச் சகிக்கவேண்டியது வந்தது, சிறைச்சாலையின் அனுபவங்கள் காணப்பட்டது, ஆகிலும் கர்த்தருடைய வேளையில் அந்த வாக்குத்தத்தம் அப்படியே நிறைவேறினது. கர்த்தர் அவருடைய வேளையில் உங்களுக்காக முன் குறித்ததை அப்படியே செய்வார். ஒருவேளைப் பாடுகளின் பாதையில் நீங்கள் இப்போது சென்று கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வேளை வருகிறது.  உங்கள் தலைகளை நிமிர்த்தும் காலம் வருகிறது. கர்த்தர் உங்களுக்குப் பதில் செய்யும் வேளை வருகிறது

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar