இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே புத்திசொல்லுகிறேன் (I urge you by the name of our Lord Jesus Christ):-

1 கொரி 1:10. சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MFP1h7qRbFg

ஒரு ஊரில் ஒரு ஸ்த்ரீ இலவசமாக வருகிற போகிற ஜனங்களுக்கு புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துக்கொண்டே வருவார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கிற இலவசமான புத்திமதி, எப்படி மற்றவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனையை தூண்டிவிடலாம், எப்படி மற்றவர்களுடைய சமாதானத்தை கெடுத்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே இருந்தது. இப்படி அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். இப்படித்தான் அநேக நபர்கள், தங்கள் உள்ளத்திலே கபட நெஞ்சோடு மற்றவர்களுக்கு புத்தி சொல்லுவார்கள்.

மேற்குறிப்பிட்ட வசனத்தில் பவுல், மற்ற உலகத்து நபர்களினிமித்தம் அல்ல, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் புத்திசொல்லுகிறார். பொதுவாக விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட், கால்பந்து போட்டி என்று எதுவாக இருந்தாலும், எல்லாரும் ஒரே நோக்கத்தில் விளையாடும்படி பயிற்சியாளர், ஆடுகள வீரர்களை, வீராங்களை பயிற்றுவிப்பார். பயிற்சியாளர் கொடுக்கிற ஆலோசனையிலும், நோக்கத்திலும் ஒருவர் வழிமாறி விளையாடிலும் அவர்களுடைய அணி தோற்றுப்போகிறதாய் காணப்படும். அதுபோலத்தான், நம்முடைய சபைகளிலும் வருகிற, பரிசுத்தவான்களாய் அழைக்கப்பட்ட அனைவரும், ஒருமனம் உள்ளவர்களாய் காணப்படவேண்டும். இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையினிமித்தம் சில நாடுகளில் உள்நாட்டு கலவரங்கள் வந்தது. சில நாடுகளில் இனக்கலவரங்கள், மோதல்கள் என்று வந்து அநேகர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தார்கள். ஆகையால் தான் இயேசு சொன்னார், தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்பதாக.

இந்நாட்களில் சத்துரு தன்னுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க அநேக வழிகளில் தங்களுடைய ஜனங்களை இணைத்து செயல்படும்போது, கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்குள்ளே அநேக வாக்குவாதங்களும், பொறாமைகளும், முறுமுறுப்பும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாய் காணப்படுகிறது. ஆகையால் சபையானது சாரமற்றுப்போகாமல், சீர்பொருந்தும்படி ஆவியானவர் சொல்லுகிறார். சபையானது ஆவிக்குரிய மாளிகைகளாக ஒன்று சேர்ந்து கட்டப்பட வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம். ஆகையால் சபை ஒரே காரியத்தை பேசவும், அதாவது, பேசி எடுக்கிற தீர்மானங்களில் ஒரே சம்மதம் காணப்படும்படியாகவும், ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் சீர்பொருந்துபடி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு சொல்லப்படுகிற புத்திமதிகளை இணங்கி செயல்பட உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar