சுமுத்திரையான தராசு(Honest scale).

சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்தி, என் உத்தமத்தை அறிவாராக (யோபு 31:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JvcXCgORLns

கர்த்தருடைய கரத்திலே சுமுத்திரையான தராசு காணப்படுகிறது. ஒவ்வொருவருடைய செய்கைகளையும் அவர் நிறுத்துப்பார்க்கிறார், அதன்படி ஒவ்வொருவருக்கும் பலனளிப்பார். யோபு,  உத்தமனும் சன்மார்க்கனும்,  தேவனுக்குப் பயந்து,  பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.  ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக: பூமியெங்கும் உலாவி,  அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.  கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ  என் தாசனாகிய யோபிவின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும்,  தேவனுக்குப் பயந்து,  பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா உமக்கு பயந்து நடக்கிறான்?  நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.  ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால்,  அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். உடனே சாத்தானுக்கு,  யோபுவை சோதிப்பதற்குக் கர்த்தர் அனுமதியளித்தார். அவனுடைய ஆஸ்தியும் ஐசுவரியங்களும் ஒரே நாளில் அழிந்துபோனது,  ஆசையாய் வளர்த்த 10 பிள்ளைகளும் மரித்துப்போனார்கள். அதன் பின்பு,  சாத்தான் மீண்டும் கர்த்தரிடத்திலிருந்து அனுமதியை வாங்கிக் கொண்டு,  யோபுவை  உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதித்தான்.  ஆனால் யோபு எல்லா சூழ்நிலைகளிலும்  உத்தமனாய் காணப்பட்டான். அவன் மனைவி,  தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று ஆலோசனைச் சொன்னாள்.  அவனுடைய 3 நண்பர்கள்,  அவனை விசாரித்து,  அவனுடைய துக்கத்தில் பங்கு கொள்ளும்படியாக வந்தவர்கள்,  யோபு மறைவாக குற்றம் செய்திருக்கக் கூடும் என்று குற்றம்சாட்டினார்கள். இந்த சூழ்நிலையில்,  காத்தரை நோக்கி,  பொய்யுரையாத உம்முடைய சுமத்திரையான தராசிலே என்னை நிறுத்திப்பார்த்து என் உத்தமத்தை அறியும் என்று ஆண்டவரை நோக்கி முறையிட்டான். ஆண்டவர் யோபுவை நிறுத்துப்பார்த்தார்,  அவனை உத்தமன் என்று கண்டார்,  ஆகையால்,  அவனை இரட்டிப்பாய் ஆசீர்வதித்து உயர்த்தினார்.

பெல்ஷாத்சார் என்னும் பாபிலோனிய ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து,  அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்துக் களித்திருந்தான். அந்த வேளையில் நேபுகாத்நேச்சாரால் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில்,  ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.  அவைகள்; கொண்டுவரப்பட்ட வேளையில்,  அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் குடித்துக் களித்திருந்த வேளையில்,  பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி,  விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று,  எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.  எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே,  மெனே,  தெக்கேல்,  உப்பார்சின். அதன் அர்த்தம் மெனே என்பதற்கு,  தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு,  அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,   தெக்கேல் என்பதற்கு,  நீ தராசிலே நிறுக்கப்பட்டு,  குறையக் காணப்பட்டாய் என்றும்,  பெரேஸ் என்பதற்கு,  உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு,  மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்று தானியேல் விளக்கிக்கூறினான். அவன் கர்த்தருடைய தராசிலே நிறுக்கப்பட்டு குறைவாய்க் காணப்பட்டதினால்,  அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் மேதியனாகிய தரியுவினால் கொலைசெய்யப்பட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,  ஒவ்வொருவருடைய வழிகளையும் கர்த்தர் சீர்தூக்கிப் பார்க்கிறார். அவருடைய கரங்களில் இருக்கிற தராசு ஒருபோதும் பொய்யுரையாது. அவர் உங்களை நிறுத்துப்பார்க்கும் போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் காணப்படவேண்டும், அப்போது, கர்த்தர் உங்களை இரட்டிப்பான ஆசீர்வாதங்களைத் தந்து உங்களை உயர்த்துவார். கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக உத்தமமான,  ஒளிவு மறைவற்ற ஒரு ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar