பரிசுத்தத்தில் நிகரற்றவர் (Unrivaled in Holiness).

வெளி 4:8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ptMosDqYQa8

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நல்லவரா என்று கேட்டால், இந்த முழு உலகமும் அவர் நல்லவர் என்பதை மறுதலிக்காது. நிச்சயமாகவே அவர் ஒருவரே நல்லவர். ஆனால் வேதாகமத்தில் அவருடைய குணாதிசயத்தை குறித்து நல்லவர் நல்லவர் நல்லவர் என்று எங்கும் மூன்று முறை தொடர்ச்சியாக எழுதப்படவில்லை. நம் இயேசு வல்லவரா என்று கேட்டால், பாதாளம் கூட இயேசு வல்லவர் என்பதை ஒத்துக்கொள்ளும். இயேசுவை போல வல்லமையுள்ளவர் ஒருவரும் இல்லை. ஆனால் வேதாகமத்தில் வல்லவர் வல்லவர் வல்லவர் என்று மூன்று முறை தொடர்ச்சியாக எழுதப்படவில்லை. நம் ஆண்டவர் அன்புள்ளவரா என்று கேட்டால், வசனம் சொல்லுகிறது தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதாக. ஒருவனை பெற்ற தாய் மறந்தாலும், இயேசு ஒருபோதும் மறப்பதில்லை. இயேசுவின் அன்பின் உச்சகட்டத்தை கல்வாரி சிலுவையில் நமக்கு காண்பித்தார். இருந்தாலும் வேதாகமத்தில் அவர் அன்புள்ளவர் அன்புள்ளவர் அன்புள்ளவர் என்று மூன்று முறை தொடர்ச்சியாக எங்கும் எழுதப்படவில்லை.

ஆனால், அவருடைய பரிசுத்தத்தை பற்றி குறிப்பிடும்போது மாத்திரம் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இரண்டு இடங்களில் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று மூன்று முறை தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எபிரேய மொழியில் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரண்டு முறை சொன்னாலே, அதற்கு மகா பரிசுத்தர் என்று அர்த்தமாய் காணப்படுகிறது. இங்கே மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளதால், அவருடைய பரிசுத்தத்தை குறித்து வகையறுக்க முடியாத, அவருடைய பிரதான குணாதிசயத்தை குறிக்கிறதாய் காணப்படுகிறது. இந்த உலகத்திலுள்ள வேறெந்த தேவர்களும் தங்களை பரிசுத்தர் என்று சொல்ல முடியாது. இயேசு ஒருவரே பரிசுத்தர் என்று தன்னை குறித்து நான் பரிசுத்தர் என்று சொன்னார்.

எகிப்து தேசத்திலிருந்து வந்த இஸ்ரவேல் ஜனங்கள், தாங்கள் இது வரைக்கும் காணக்கூடாத அற்புதத்தை கண்டார்கள். எல்லா பக்கமும் அடைபட்ட சூழ்நிலையில் கர்த்தர் செங்கடலை இரண்டாக பிளந்து வெட்டாந்தரையில் அவர்களை நடத்திக்கொண்டு சென்றார். அதன் பிறகாக கர்த்தரை குறித்து அவர்கள் பாடியபோது முதலாவது அவர்கள் சொன்ன வார்த்தை கர்த்தர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர் என்று சொன்னார்கள். கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? (யாத் 15:11) என்பதாய் இஸ்ரவேல் ஜனங்கள் வரிசைப்படுத்தி சொல்லும்போது தேவன் அற்புதர் என்று சொல்லுவதை பார்க்கிலும் அவர் பரிசுத்தர் என்று பாடினார்கள். எகிப்து தேசத்தில் நானூறு வருஷம் இருக்கும்போது பல்வேறு தேவர்களை கண்டார்கள், பல்வேறு மந்திரவாதிகளை கண்டார்கள், பல்வேறு விக்கிரகங்களை கண்டார்கள். இவைகளையெல்லாம் கண்டவர்கள், தேவன் செங்கடலின் மூலமாக நடத்தியபோது அவருடைய பரிசுத்தத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு, அவர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர் என்று பாடினார்கள். மெய்யாகவே நம் தேவனை போல பரிசுத்தர் வேறு எவருமில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar