எருசலேமுடன் பட்சமாய் பேசுங்கள் (Speak tenderly to Jerusalem).

எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி,     அதின் போர் முடிந்தது என்றும்,     அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும்,     அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும்,     அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்  (ஏசாயா 40:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fmg3XQ8YtoA

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் காணப்படுகிற அறுபத்து ஆறு அதிகாரங்களும் முழு வேதாகமத்தில் காணப்படுகிற  அறுபத்து  ஆறு புத்தகங்களுக்கு ஒப்பாகச் சொல்லுவார்கள். முதல்  முப்பத்தொன்பது அதிகாரங்களும் பழைய ஏற்பாட்டிற்கு ஒப்பாகவும்,     நாற்பதாவது அதிகாரத்திலிருந்து வருகிற இருபத்தேழு அதிகாரங்களும் புதிய ஏற்பாட்டிற்கு ஒப்பாகவும் காணப்படுகிறது.  முப்பத்தொன்பதாவது  அதிகாரம் கர்த்தருடைய கோபத்திலும்,     தண்டனையிலும் முடிகிறது. எசேக்கியா ராஜா,     கர்த்தர் பேரில் வைத்த நம்பிக்கையில் அவனுக்கு ஒப்பானவர்கள் யாரும் அவனுக்கு முன்பும்,     பின்பும் எழும்பினதில்லை. அவன் திடீரென்று  வியாதிப்பட்ட  வேளையில் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் தன்னுடைய வார்த்தையை அனுப்பினார். உன் வீட்டின் காரியங்களை ஒழுங்குபடுத்து,     நீ மரிக்கப் போகிறாய் என்பதாக. உடனே அவன் சுவர் புறமாய் திரும்பி எருசலேம் தேவாலயத்திற்கு நேராக தன் கண்களை ஏற்றெடுத்து,     ஒரு நமுட்டைப் போலவும்,     தகைவிலான் குருவியைப் போலவும்,     புறாவைப் போலவும் புலம்பி ஜெபித்த வேளையில் கர்த்தர் அவனுடைய ஆயுசின் நாட்களில் பதினைந்து வருஷத்தைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியா ராஜா,     கர்த்தர் வாக்கருளினபடியே தனக்குச் செய்ததினால்,     என் ஆயுசின் வருஷங்களெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைந்து,     வியாதியின் கொடுமையை நினைத்து நடந்து கொள்ளுவேன் என்று தீர்மானித்தான்.  ஆனால்,     அவன் வியாதியிலிருந்து விடுதலையான செய்தியைக் கேள்விப்பட்ட பாபிலோனிய ராஜா நிருபங்களையும்,     வெகுமதிகளையும் அனுப்பின உடன் அவன் சந்தோசப்பட்டு,     கர்த்தரிடம் விசாரியாமல்,     தன்  வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான். ஆகையால் கர்த்தருடைய கோபத்தின் வார்த்தைகள்  ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் அவனுக்கு வெளிப்பட்டது,     நாட்கள் வரும் உனக்குண்டானவற்iயும்,     உன் குமாரர்களில் சிலரையும் பாபிலோனிய ராஜா  சிறைபிடிப்பான்  என்பதாக. யூதா ஜனங்களின் எழுபது வருட பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு வித்திட்டவர்  எசேக்கியா ராஜாவாய் காணப்படுகிறார். 

நாற்பதாவது அதிகாரத்தின் துவக்கத்திலிருந்து கர்த்தருடைய ஆறுதலும் தேறுதலும் வெளிப்படுகிறது. என் ஜனங்களோடு பட்சமாய் பேசுங்கள்,     அன்போடும் இரக்கத்தோடும் பேசுங்கள் என்று கர்த்தர் கூறுகிறார். அவருடைய கோபம் ஒரு நிமிடம்,     ஆனால் தயவோ நீடியவாழ்வு,     அவர் எப்போதும்  கோபமாயிரார்,     எப்பொழுதும் கடிந்து கொள்ளார். ஆகையால் கர்த்தருடைய ஊழியர்களும் சிலவேளைகளில் கடிந்து கொண்டு கண்டனம் பண்ணி புத்தி சொன்னாலும்,     மற்ற நேரங்களில் ஆறுதலின் தேறுதலின் வார்த்தைகளையும்,     அன்பின் வார்த்தைகளையும் பேசுகிறவர்களாகவும் காணப்பட வேண்டும்.  போவாஸ்,     ரூத்தை பட்சமாய் விசாரித்தான்,     ரூத் அவனிடம் நான் அந்நியதேசத்தாளாயிருக்க,     நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது,     நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும்,     நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். மெலித்தா தீவுக்கு முதலாளியாகிய  புபிலியு  என்னும் பேர் கொண்டவன்,     பவுலையும் கப்பல் சேதத்தில் அவனோடு பாதிக்கப்பட்டவர்களையும் ஏற்றுக்கொண்டு,     மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான் என்று வேதம் கூறுகிறது. இப்படிப்பட்ட அன்பின்  வார்த்தைகளைக் கேட்கத் திரளான ஜனங்கள், ஆவலோடு காணப்படுகிறார்கள். பட்டயக் குத்துகள் போலப் பேசுகிறவர்கள் உண்டு,     குற்றம் கண்டுபிடித்தும்,     குற்றஞ்சாட்டியும் பேசுகிறவர்களும் உண்டு. மற்றவர்களை அற்பமாய் கருதி அகம்பாவத்தோடு பேசுகிறவர்களும் உண்டு,     அப்படிப்பட்டவர்கள் மத்தியில் கர்த்தருடைய பிள்ளைகள் மற்றவர்களிடம் பட்சமாய் பேசுங்கள்.  உங்கள் போர் முடிந்தது என்றும் அவர்களோடு பேசுங்கள் என்று கர்த்தர் கூறுகிறார். கல்வாரிச் சிலுவையில் உங்களுடைய யுத்தங்களை எல்லாம் கர்த்தர் முடித்து வெற்றி சிறந்தார் என்றும் கூறுங்கள். சத்துரு ஜனங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறவன்,     அவன் சிலரை உங்களுக்கு விரோதமாக  எழும்பும் படிக்குத்   தூண்டுகிறவன். ஆனால் புதிய உடன்படிக்கையின் விசுவாசிகளாகிய உங்களுடைய யுத்தங்கள் கர்த்தருடையது,     அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று   உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். சர்ப்பத்தின் தலை ஏற்கனவே சிலுவையில் நசுக்கப்பட்டாயிற்று,     அவனுடைய ஆயுதங்களையும் இயேசு உரிந்துபோட்டார்,     அவன் தன் வாலின் மூலம் செய்கிற கிரியைகளை நீங்கள் இயேசுவின் நாமத்தில் மிதித்து சாம்பலாக்கும் படிக்குக் கர்த்தர் உங்களுக்காக விட்டு வைத்திருக்கிறார். சர்ப்பங்களையும் தேள்களையும் மிதித்து ஜெயமெடுங்கள். அதுபோல உங்கள் அக்கிரமங்களையும் பாவங்களையும் கூட சிலுவையில் அதற்குரிய கிரயத்தைக் கொடுத்து இயேசு நிவிர்த்தியாக்கி விட்டார். அவருடைய ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உங்களைச் சுத்திகரித்திருக்கிறது. ஆகையால் அனுதினமும் அவருடைய ரத்தத்தால் கழுவப்படுங்கள்,     ஈசோப்பினால் என்னைக் கழுவும் என்று ஜெபியுங்கள்,     நல்மனசாட்சியோடு கர்த்தரைச் சேவியுங்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae