குமாரனுடைய சாயல் (Image of Son).

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு,    தேவன் எவர்களை  முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார், எவர்களை முன் குறித்தாரோ  அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார், எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோமர் 8:29,   30).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Oue9FaNIPUA

தேவனுடைய ஜனங்கள் விஷேசித்தவர்கள்,    பாக்கியவான்கள். நம்மைக் கர்த்தர் அவருக்கென்று தெரிந்தெடுத்தது தற்செயலாய்,    இப்போது நடந்த ஒரு காரியமல்ல. அவர்  உலகத்தோற்றத்துக்கு  முன்னே  கிறிஸ்துவுக்குள்  நம்மை அவருக்கென தெரிந்துகொண்டார் என்று எபேசியர் 1:4 கூறுகிறது. தேவன் முன்குறித்து,     தெரிந்து கொண்டு,    இரட்சித்தவர்களை தமக்காக அழைத்துமிருக்கிறார். இயேசு இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில் சிலரை தம்மைப் பின்பற்றி வரும்படிக்கு அழைத்தார். ஏற்கனவே அவர்கள் தேவனால்  கிறிஸ்துவுக்குள் முன் குறிக்கப் பட்டவர்கள்,    ஆகையால் அவர்களையே பின்னாட்களில் தம்மோடிருக்கவும்,    தம்பணியைச் செய்யவும்,    தம்முடைய சீஷர்களாய் காணப்படும் படிக்கும் அழைத்தார். அதுபோல ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் முன்குறித்து,    அவருக்காகவும் அவர் பணியைச் செய்யவும் அழைத்திருக்கிறார்.  அவரால் அழைக்கப்பட்ட உங்களை  நீதிமான்களாக்கியுமிருக்கிறார். நம்முடைய சுய நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தையும் குப்பையுமாய் காணப்படுகிறது. இயேசுவின்  கிருபையினாலும்,    அவர் கல்வாரியில் சிந்தின இரத்தத்தினாலும் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய் காணப்படுகிறீர்கள். அவருடைய  இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச்  சுத்திகரித்திருக்கிறது. ஆகையால் சத்துரு ஒரு நாளும் நம்மைக் குற்றப்படுத்த முடியாது. அவர் நீதிமான்களாக்கினவர்களை அவர் மகிமைப் படுத்தி,    பரலோகத்தில் கொண்டு சேர்க்கிறவரும் கூட. அவர் முன்குறித்த ஒருவரையும் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் பாதி வழியில் கைவிடுகிறவர் அல்ல. உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடு இருந்து கடைசி மட்டும் நடத்துவார். 

ஆனாலும் தேவனுடைய இந்த நித்திய திட்டத்திற்கு நம்முடைய ஒத்துழைப்பும்,    பங்களிப்பும் அவசியம். நாம் ஒத்துழைக்கவில்லையெனில் யூதாசைப் போல அழைப்பை இழந்து தேவதிட்டத்திலிருந்து தவறிவிடுவோம். உலக தோற்றத்திற்கு முன்பே தேவன் நம்மைத் தெரிந்து கொண்டதின் காரியம்,    நாம் இந்தப் பூமிக்குரிய ஜீவியத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அவருடைய குமாரனாகிய இயேசுவின் சாயலை அடைய வேண்டும்.   நாமெல்லாம்  திறந்த முகமாய் இயேசுவின் மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு,    ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து  மறுரூபப்படுகிறோம்  என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய வருகையின் நாளில் அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் இருப்போம். ஆகையால் இந்தப் பூமிக்குரிய ஜீவியத்தில் இயேசுவின் சாயலை அணிந்து,    அவருடைய வாசனையை வெளிப்படுத்த வாஞ்சிப்போம். நம்மைக் காண்கிறவர்கள் நம்மில்  இயேசுவைக் காணட்டும். நடமாடுகிற அவருடைய நிருபங்களாய்  காணப்படக் கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae