ஏன் கர்த்தர் தம்முடைய  வருகையைத்  தாமதிக்கிறார்?   (Why does the Lord delay His coming?).

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி,      கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,      நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bkCQW2P2hmI

இயேசு கிறிஸ்து,      இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனுகுலத்தை மீட்கும் படிக்கு இந்த பூமியில் ஸ்திரீயின் வித்தாகத் தோன்றினார். அவர் மீட்பின் வேலையை முடித்தபின்பு,      கல்வாரிச் சிலுவையில் மரித்து,      அடக்கம்பண்ணப்பட்டு,      உயிர்த்தெழுந்து,      நாற்பது நாட்கள் சீஷர்களுக்கு தன்னை உயிரோடிருக்கிறவராய் காண்பித்து,  பின்பு பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர் இனி மணவாட்டி சபையை,      நம்மை சேர்த்துக் கொள்ளும் படிக்கு மத்தியவானில் வரப்போகிறார். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்,      பிரதான தூதனுடைய சத்தத்தோடும்,      தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்,      அப்பொழுது கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,      மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,      இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் என்று 1 தெச. 4:16,     17 கூறுகிறது. இதைத்தான் இயேசுவின் ரகசிய வருகை என்று கூறுகிறோம். அவருடைய வருகை நினையாத நேரத்தில்,      திருடனுடைய வருகையைப் போலிருக்கும் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்போடு ஆண்டவருடைய வருகையை எதிர்நோக்கி புத்தியுள்ள கன்னிகைகளைப் போல ஜீவிக்க வேண்டும். அதன்பின்பு ஏழு வருடம் இந்த பூமியானது அந்திக்கிறிஸ்து என்ற பொல்லா மனிதனுடைய ஆட்சியின் கீழ்க் காணப்படும். அந்த ஏழு வருடங்கள் முடியும் போது,      இயேசுவின் பகிரங்க இரண்டாம் வருகை காணப்படும். அவர் மரமேறிச் சென்ற அதே ஒலிவ மலையில் அவருடைய பாதங்கள் வந்து இறங்கும். இரகசிய வருகையில் கைவிடப்பட்டவர்களும்,      பூமியின் ராஜாக்களும்,      அதிபதிகளும்,      அவரைக் குத்தினவர்களும் அவரைக் கண்டு புலம்புவார்கள். 

கர்த்தருடைய வருகை ஏன் தாமதிக்கிறது என்ற கேள்வி அனேகருடைய இருதயத்தில் காணப்படுகிறது. அதைக்குறித்து பரியாசம் செய்கிறவர்களும் உண்டு,      அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று அப்படிப்பட்டவர்கள் சொல்லுவார்கள். கர்த்தர் தம்முடைய வருகையைக் காலதாமதம் செய்வதின் நோக்கம்,      ஒருவரும் கெட்டுப்போகக் கூடாது,      பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்ட அக்கினிக் கடலில் போய்விடக் கூடாது என்பதற்காகக் கர்த்தர் தம்முடைய வருகையைக் காலதாமதம் செய்கிறார். மேலும் எல்லாரும் மனந்திரும்பி இரட்சிக்கப் பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடைய வேண்டும் என்பதற்காகவும் காலம் தாழ்த்துகிறார். துன்மார்க்கன் தன் பாவத்தில் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் இதுவரை மனம் திரும்பாதவர்கள்   மனந்திரும்பி,      அதற்கேற்ற கனிகளைக் கொடுங்கள். கர்த்தருடைய நீடிய பொறுமையை உங்கள் இரட்சிப்பென்று எண்ணுங்கள். மாரநாதா,      கர்த்தர் வருகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae