ஞானத்தின் சத்தம் (Voice of Wisdom).

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,     வீதிகளில் சத்தமிடுகிறது(நீதி. 1:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bTg_ilmFVho

கர்த்தருடைய ஆவியானவர்,     சாலொமோன் ஞானி மூலம் நீதிமொழிகளை வெளிப்படுத்தினதின் நோக்கம்,     தேவ ஜனங்கள் ஞானத்தையும்,     புத்திமதிகளை உணர்ந்து,     விவேகம்,     நீதி,     நியாயம்,     நிதானம் என்பவற்றைப்பற்றிய உபதேசத்தை அடையவேண்டும் என்பதற்காக. நீதிமொழிகளை வாசிக்கும் போது அவைகள் பேதைகளுக்கு வினாவையும்,     வாலிபர்களுக்கு அறிவையும் கொடுக்கும்,     புத்திமான்கள் அறிவில் தேறினவர்களாகவும்,     விவேகிகளுக்கு  நல் ஆலோசனைகளைப்  பெற்றவர்களாயும் மாறுவார்கள். கடைசி நாட்களில் கர்த்தருடைய ஜனங்கள் அறிவில்லை மையால் சங்காரமாகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் வேதத்தின் மகத்துவங்களை எழுதிக் கொடுத்தார்,     நாமோ அவைகளை அந்நிய காரியமாக எண்ணினோம். ஆகையால் குடும்ப வாழ்க்கைகளில் பிரச்சினைகள் காணப்படுகிறது,     தேசங்களில் குழப்பங்கள் காணப்படுகிறது,     பிள்ளைகள்  மதியற்றவர்களாய்  வழிதவறி  ஜீவிக்கிறார்கள்,     சபைகளில் ஆவிக்குரிய வீழ்ச்சி காணப்படுகிறது. 

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது என்பது,     ஞானத்திற்குச் சத்தம் இல்லை,     ஆகையால் அது கர்த்தருடைய சத்தமாய் காணப்படுகிறது. அவர் ஒருவரே ஞானமுள்ளவர்,     அவருடைய அறிவு அளவில்லாதது,     அவர் சர்வஞானி,     எல்லாவற்றையும் அறிந்தவர். வேதத்தை வாசிக்கும் போதும்,     அதிலிருந்து செய்திகளைக் கேட்கும் போதும் கர்த்தருடைய சத்தம் வெளிப்படுகிறது.  என் ஆடுகள் என் சத்தத்தை அறியும்,     அவைகள்  எனக்குப் பின்செல்லுகிறது என்று ஆண்டவர் நம்பிக்கையோடு கூறினார்.  ஆனாலும் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமலும்,     கீழ்ப்படியாமலும் நாம் போன வேளைகள் அனேகம். நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்,     கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை என்று ஆண்டவர் வேதனைப் பட்டார். நமக்கு கேடுண்டாகும்படிக்கு  தேவனுடைய  ஆலோசனைகளைத் தள்ளின வேளைகள் அனேகமாய் காணப்படுகிறது. 

கர்த்தருடைய ஞானத்தின் சத்தத்திற்கு செவிகொடாமல் அவருடைய அறிவை நாம் வெறுக்கும் போது,     நம்முடைய ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நகைத்து,     நாம் பயப்படுங்காரியம் வரும்போது அவர் நம்மை கேலி பண்ணுவார். நமக்கு ஆபத்து சூறாவளிபோல் நேரிடும்போதும்,     நெருக்கமும் இடுக்கணும்   வரும்போதும்,     கர்த்தர் நமக்கு உதவிசெய்யாமல் ஆகடியம் பண்ணுவார். நாம் அவரை  நோக்கிக் கூப்பிடும் போது  மறு உத்தரவு கொடுக்கமாட்டேன் என்றும் நாம் அதிகாலையில் அவரைத் தேடினாலும் அவரை காணமுடியாது என்றும் கூறுகிறார். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள்,     இந்த நாட்களில் கர்த்தருடைய ஞானத்தின் சத்தத்திற்குச் செவி கொடுங்கள். அவருடைய சத்தத்தை அறிந்து அவருக்குப் பின்செல்லுகிற மந்தையின் ஆடுகளாய் காணப்படுங்கள். எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,     அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி,     ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் என்ற கர்த்தருடைய  வாக்குத்தத்தின்  படி கர்த்தருடைய ஞானத்தின் சத்தத்திற்கு கீழ்ப்படிகிற உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae