ஆண்டவரே உமக்கு சித்தமானால்(Lord, if it is your will).

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். மத்தேயு 8:2

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uzVacBMzU8o

இயேசு மலைப் பிரசங்கத்தை முடித்து கீழே இறங்கி வந்த வேளையில், ஒரு குஷ்டரோகி  வந்து, பணிந்து, ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று கூறினான். தன்னுடைய கடினமான சூழ்நிலையிலும் ஆண்டவருடைய சித்தத்திற்குத் தன்னை முழுவதுமாய் விட்டுகொடுக்கிறதைப் பார்க்கமுடிகிறது. இயேசுவை ஆண்டவரே என்று முதன்முதலில் புதிய ஏற்பாட்டில் அழைத்தவனும் இந்த குஷ்டரோகிதான். அவனுக்கு ஆண்டவருடைய வல்லமையின்மேல் சந்தேகமில்லை. ஆனால், தான் குணமடைவது தேவனுடைய சித்தமானதாயிருந்தால் மாத்திரம் குணமடையட்டும். தேவசித்தம் இல்லாமல் குணமடைவதைப் பார்க்கிலும் தேவசித்தத்தோடு குஷ்டரோகியாய் இருப்பதே மேல் என்று நினைத்திருக்கக் கூடும். தேவ சித்தத்திற்குத் தன்னை விட்டுக்கொடுக்கிற வாழ்வு பாக்கியமுள்ளது. இயேசு தமது கையை நீட்டி அந்த குஷ்டரோகியைதொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். கர்த்தர் நம்மேல் கொண்ட நினைவுகள்,  தீமைக்கல்ல, நன்மைக்கேதுவானவைகள் என்பதை அறிந்தவர்கள் தேவசித்தத்திற்கு தன்வாழ்க்கையை முழுவதுமாய் ஒப்புக்கொடுப்பார்கள்.

இயேசு சீஷர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து பிதாவை நோக்கி ஜெபம் பண்ணினபோது, என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். இரண்டாந்தரமும் மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி,  ஜெபம் பண்ணினார். பாடுகள் என்னும் பாத்திரம் கடினமானது தான், சிலுவை மரணம் என்பது வேதனை நிறைந்தது தான், இருந்தாலும் அது தான் இயேசுவைக்குறித்து பிதாவாகிய தேவன் கொண்ட நோக்கமாக இருந்ததால் அதற்காகத் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, நமக்கு முன்னுதாரணத்தை வைத்துப்போனார். தேவச்சித்தம் செய்வது தற்காலத்தில் சிலவேளைகளில் கடினமாகக் காணப்பட்டாலும் முடிவில் அது ஆசீர்வாதமாக முடியம்.

ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சி கொடுத்தார், அப். 13:22.  இயேசுவுக்கு சித்தமானவைகளைச் செய்யும்போது அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாய் மாறுகிறோம். அவருக்கு சித்தமானவைகளை அறிந்து, அதை நாம் செய்யும்போது, அது தேவனுடைய இருதயத்தை மகிழ்விக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்பதை அறியாதவர்களாய் காணப்படுவதினால், ஆண்டவருக்குச் சித்தமானால் இன்னின்னதைச் செய்வோம் என்று நம்முடைய பேச்சில் கூட நாம் சொல்ல வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆகையால், கர்த்தருடைய பூரணச் சித்தம் செய்ய நம்மை அற்பணித்து, நித்திய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org