சீர்கேட்டைக் குணமாக்குவேன்(I will heal their backsliding).

நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன், என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று (ஓசியா 14:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4Zh7vdNkgDo

தேசங்களின் ஜனங்கள் கர்த்தரண்டைத் திரும்பும் போது,  அவர்களுடைய சீர்கேட்டைக் குணமாக்குவார். இஸ்ரவேல் தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று. ஆகையால்,  இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்,   அவர்களுக்கு இரக்கஞ்செய்வதில்லை,  அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்,  அவர்கள் என் ஜனமல்ல,  நான் அவர்கள் தேவனாயிருப்பதில்லை என்றும் கர்த்தர் தன் கோபத்தில் கட்டளையிட்டார். இந்நாட்களிலும் தேசங்கள் கர்த்தரை விட்டு தூரம் போகும்போது,  பின்வாங்கிப் போகும் போது,  கர்த்தருடைய கோபாக்கினை தேசங்களின் மேல் வெளிப்படுகிறது. கொள்ளை நோய்களும்,  அழிவுகளும் தேசத்தின் குடிகளுக்கு வருகிறது.   அவர்கள் அக்கிரமங்களும்,  பாவங்களுமே அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. ஆகையால் நாம் நம்முடைய வஸ்திரங்களை அல்ல,  இருதங்களைக் கிழித்து ஆண்டவரண்டை திரும்பும் காலமாய் இந்நாட்கள் காணப்படுகிறது. 

எருசலேமே,  எருசலேமே,  தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து,  உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று (லூக்கா 13:34) என்று கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். ஆண்டவர் அவருடைய சிறகின் கீழ் பாதுகாப்போடு நாம் காணப்படவேண்டும் என்று விரும்புகிறார். தேசத்தின் ஜனங்கள் அழிவது கர்த்தருடைய சித்தமல்ல. துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தில் மரிப்பதும் ஆண்டவருடைய சித்தமல்ல. ஆனால் கர்த்தருடைய அன்பைப் புறக்கணித்து,  அவருடைய அடைக்கலத்தில் காணப்படுவதற்கு நாம் மனதில்லாமல் இருக்கும் போது ஜனங்களை சத்துருவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறார். இயேசு கழுதைக்குட்டியின் மேல் ஏறி எருசலேமுக்கு வந்தபோது அந்த நகரத்தைப்பார்த்து,  அதற்காகக் கண்ணீர் விட்டழுதார். உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும். ஆனால் உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனாய் ஆகையால் உனக்கு அழிவு வரும் என்று கர்த்தர் துக்கப்பட்டார். அதன்படி எருசலேம் நகரமும்,  அதன் குடிகளும் கி.பி. 70-ல் பெரிய அழிவைச் சந்தித்தார்கள்,  சுமார் 11 லட்சம் யூதர்களும்,  மற்றவர்களும் கொலைசெய்யப்பட்டார்கள். தேசங்களின் அழிவிற்கு முன்பாக கர்த்தர் எச்சரிக்கிறார்,  தருணங்களைக் கொடுக்கிறார்,  அவற்றை அசட்டைச் செய்து,  நிர்விசாரத்தின் நிமித்தம் விட்டுவிடும் போது,  ஜனங்களைச் சத்துருவின் கரங்களில் விற்றுபோடுகிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தரண்டை திரும்புங்கள். அப்போது அவர் உங்களை  மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பார். அவருடைய அன்பு ஒருநாளும் உங்களை விட்டு விலகுவதில்லை,  கர்த்தருடைய கோபமும் உங்களைவிட்டு நீங்கும். கர்த்தர் உங்களுக்குப் பனியைப்போலிருப்பார்; லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவீர்கள், லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar