எதைச் செய்தாலும் மனப்பூர்வமாய் செய்யுங்கள் (Whatever you do, work heartily).

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள் (கொலோ. 3:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aq9vEVQ4Zzo

கர்த்தருடைய வேலையானாலும்,    உலக வேலையானாலும் அதை ஆவலுடன் செய்வது கர்த்தருடைய கிருபையாகும்.  சுறுசுறுப்புள்ளவன் கை செல்வத்தை உண்டாக்கும் என்றும் தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால்,    அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,    ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் சோம்பல்களையும் வீணான பொழுது போக்குகளையும் தவிர்த்து  கர்த்தருக்காகச் செயல்படுகிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. நீங்கள் உற்சாகமாகச் செயல்பட்டால் எந்த வேலையையும்  கர்த்தருக்காகச் செய்து முடிக்கமுடியும்.

எருசலேமின் அலங்கம் இடிபட்டதும்,    அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்ற செய்தியைக் கேட்டவுடன் நெகேமியாவின் இருதயத்தில் பாரம் வந்தது. அந்த பாரம் தரிசனமாய் மாறினது. ஆகையால் அலங்கத்தைக் கட்டிமுடிக்கத் தீர்மானித்து அதற்காக ஜெபம் செய்தான். அந்த அலங்கம் சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமும் பன்னிரண்டு மீட்டர் உயரமும் இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டது. நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட அந்த அலங்கத்தைத் திரும்ப எடுத்துக்கட்ட நெகேமியா தீர்மானித்தான். உண்மையான தரிசனம் உள்ளவர்களுடைய இருதயத்தில்  விருப்பத்தையும் செய்கையையும் உருவாக்குகிறவர் கர்த்தர்(பிலி. 2:13). கர்த்தருடைய பிள்ளைகள் அனேக வேளைகளில் கர்த்தருக்காக எதையாகிலும் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள்,    ஆனால் அரைகுறை மனதுடன் காணப்படுவதினால் அதின் செய்கை உண்டாவதில்லை. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான்,    தேவன் நம்முடைய உள்ளிந்திரியங்களை அறிந்திருக்கிறார். ஆனால்  நெகேமியாவின் உள்ளத்தில் உண்மையான விருப்பமும் பாரமும் இருந்ததினால் அந்த தரிசனத்தைச் செயல்படுத்த வேண்டிய தயவு வெளிப்பட்டது. அர்தசஷ்டா ராஜாவின் கண்களில் தயவு கிடைக்குப்படிக்குக் கர்த்தர் செய்தார். நெகேமியா பெர்சிய தேசத்திலிருந்து எருசலேமுக்கு வந்து தன் தரிசனத்தை யூதாவின் குடிகளோடு சொன்ன வேளையில் அவர்களும் அந்த நல்ல வேலைக்கு தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தருடைய வேலை அது உலகத்தில் காணப்படுகிற எல்லா வேலைகளை விட நல்ல வேலையாகும். அந்த நல்ல வேலைக்கு உங்கள் கரங்களையும் தோள்களையும் கொடுக்கிறவர்களாய் காணப்படுங்கள்,    ஒருநாளும் மற்றவர்களுடைய கரங்களும் இருதயங்களும் தளர்ந்து போகும் படிக்குச் செய்துவிடாதிருங்கள். யூதர்களின் எதிரிகள் ஜனங்களை தடுத்து நிறுத்தி  அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள். அவர்களை நிந்தித்து,    சோர்வுண்டாக்கி,    ஒரு நரி ஏறிப்போனால் அலங்கம் இடிந்து விழும் என்றும் கூறினார்கள். ஆனால் நெகேமியாவும் யூத ஜனங்களும் ஒருமனதோடு உற்சாகமாய் வேலையைச் செய்ததினால் அலங்கம் ஐம்பத்திரண்டு நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் கர்த்தருடைய பணிக்காக உழைத்தாலும் விதைத்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். அப்போது உங்களைக் கொண்டு கர்த்தர் செய்கிற காரியங்கள் பயங்கரமாயிருக்கும்

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae