தேவனுடைய வாக்குத்தத்தங்கள் (God’s Promises):-

2 கொரி 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/82yBXH8F5wo

கிறிஸ்துவுக்குள் உண்டாகும் வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருந்து தேசத்துக்கு, சபைக்கு, குடும்பத்திற்கு, தனி நபர்க்கென்று வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ளுவது நல்லது. அதே வேளையில் கிறிஸ்தவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தை நோக்காமல், வாக்குத்தத்தை அறிவிக்கின்ற ஊழியக்காரர்களை நோக்குவது தான் வருந்தத்தக்க காரியமாய் காணப்படுகிறது. தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் வாக்குத்தத்தை அறிவிக்கின்ற எல்லா ஊழியக்காரர்களையும் பார்த்து கடைசியில் கர்த்தர் எனக்கு என்ன வார்த்தையை கொடுத்தார் என்பதை மறந்துபோய்விடும் சூழ்நிலையில் தேவ ஜனங்கள் இருக்கலாகாது. கர்த்தர் அந்தந்த சபைக்கென்றும், சூழ்நிலைக்கென்றும் கொடுத்த வாக்குத்தத்தை சரியாக புரிந்து சுதந்தரிக்கிறவர்களாய் தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.

தேவன் வாக்குத்தத்தை கொடுத்தவுடன் அது நிறைவேற ஜெபிக்க வேண்டும், அதோடு விசுவாசிக்கவும் வேண்டும். தேவன் கொடுத்த வாக்குத்தத்தை சுதந்தரிக்க நம்முடைய மாம்சீக பெலனை சார்ந்திருக்க கூடாது. ஆபிரகாம் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்தை ஆகார் மூலம் நிறைவேற்ற மாம்சத்தில் முடிவெடுத்தான். அதன் விளைவுகள் நேர் எதிராக இருந்தது. தாவீதுக்கு கர்த்தர் சொன்னார் என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின் மேல் தலைவனாய் இருப்பாய் என்று கூறினார். இந்த வாக்குத்தத்தம் நிறைவேற தாவீது தன் மாம்ச பெலத்தில் முயற்சிக்கவில்லை. சவுல் இரண்டு முறை தாவீதின் கையில் சிக்கினான். தாவீது நினைத்திருந்தால் சவுலை கொன்று இராஜ்யபாரத்தை நிலைநாட்டியிருக்கலாம். அதுபோல சவுலின் தளபதி, ஆலோசனைக்காரன் அப்னேரும் தாவீதின் கையில் சிக்கினான். தாவீது நினைத்திருந்தால் அவனை கொன்று இராஜ்யபாரத்தை ஸ்தாபித்திருக்கலாம். பின்பாக சவுலின் மகன் இஸ்போசேத் பல் பிடுங்கப்பட்டவனை போல காணப்பட்டபோது தாவீது அவன் மீது யுத்தம் செய்து அவனை கொன்று போட்டிருக்கலாம். அதையும் தாவீது செய்யவில்லை. இதையெல்லாம் தாண்டி இஸ்ரவேல் ஜனங்கள் தாமாகவே முன் வந்து தாவீதை அரசாளும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆகையால் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற குறுக்கு வழியில் போகாதிருங்கள். கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருங்கள். விசுவாசத்துடன் இருங்கள். இடைவிடாமல் பெற்றுக்கொள்ளும் வரை ஜெபத்தில் தரித்திருங்கள். கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தை நிச்சயமாய் உங்களுக்கு நிறைவேற்றுவார். அவர் பொய் சொல்ல மனிதன் அல்ல; மனம் மாற மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர். அவரே கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றுவார். அவர் உங்கள் வாழ்க்கையில் கொடுத்த நல்வார்த்தைகள் ஒன்றும் தரையில் விழாமல் பாதுகாத்துக்கொள்ளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar