சூலமித்தி – கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்(Shulammite-I am black, but comely) :-

உன். 1:5. எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/e32r-XlxZYE

தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, பெண் பிள்ளைக்கு தகாத வேலையாம் திராட்சை தோட்டங்களுக்கு காவல்காரியாய் ஏற்படுத்தப்பட்டு நசுக்கப்படுகிறாள் சூலமித்தி. பகலின் உஷ்ணம் இவளை கருத்துபோகப்பண்ணிற்று. பின்பு நேசரின் அன்பினால் விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு போகப்படுகிறாள். எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன் என்றபடி தாலாட்டப்படுகிறாள். இப்படி அவள் உயர்த்தப்படும்போது பழைய காரியங்களை மறக்கிறாள். இப்படிப்பட்ட வசதிகள் பெருகும்போது, உயர்த்தப்படும்போது, உல்லாசம் மிஞ்சும் போது, ஆடம்பரம் பெருகும்போது அநேகருடைய நிலை இதுதான்.

இப்போது நேசர் அவளை தேடி வருகிறார்; கதவை தட்டுகிறார். ஆனால் அவளோ கதவை திறக்க மனமின்றி என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றாள். கடைசியாக நேசர் அவ்விடத்தைவிட்டு அவள் கால தாமதம் பண்ணினதினால் கடந்து சென்றுவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அநேக கிருஸ்துவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இயேசு அநேகமுறை கதவை தட்டியும் சோம்பலினிமித்தமாக, சோர்வினிமித்தமாக அசட்டை பண்ணிவிடுகிறோம். கறுப்பாயிருந்தாலும் அழகாய் இருக்கக்கூடிய சூலமித்தி. வெயிலின் உஷ்ணத்தினிமித்தம் கருப்பாய், எல்லாராலும் வெறுக்கப்பட்ட நிலையில் இருந்தவளை, உயர்த்த நிலையில் உயர்த்தியபிறகு வந்த மேட்டிமை அவளை சோர்வுற செய்தது. பின்பு அவள் தன் நேசருக்காக அலைந்து திரிகிறவளாக காணப்பட்டாள்.

சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் (1 தீமோ 5:6) என்றும் வேதம் சொல்லுகிறது. அர்த்தம் நேசர் மீது குறிக்கோளாய் இருப்பதை பார்க்கிலும் சுகபோகத்தை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு ஜீவிப்பவர்கள். சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள். ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார் (ஏசா 3 : 16 – 17 ) என்று ஒருபோது கர்த்தர் நம்மை பார்த்து சொல்கிறவராக நாம் நடந்துவிடக்கூடாது.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org