இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்( All these are the beginning of birth pains).

இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் (மத்தேயு 24:8).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/i9Rf9MinrXI

இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் ஆண்டவரிடத்தில் வந்து உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்பதைக் குறித்து கேட்ட வேளையில், இயேசு கடைசிக் காலத்தின் அடையாளங்களைப் பட்டியலிட்டு கூறியதைத் மத்தேயு 24-ம் அதிகாரத்திலும்,  லூக்கா 21-ம் அதிகாரத்திலும் வாசிக்கிறோம். அவைகள் ஒவ்வொன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்களில் நிறைவேறிக் கொண்டிருப்பதால், இந்த நாட்கள் தான் கர்த்தருடைய வருகையின் நாட்கள் என்பதை நாம் தெளிவாக உணர முடியும்.  ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் உலகத்தின் முடிவுக்குரிய சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும் போது, கர்த்தர் வாசல் படியில் வந்திருக்கிறார் என்பதை அறிந்து, அவருடைய வருகைக்குப் பாத்திரவானாய் காணப்படத்தக்க ஜீவியம் செய்யவேண்டும்.

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் காணப்படுங்கள், என்பது கர்த்தர் கூறின முதல் அடையாளம்.   அதற்கு ஏற்றபடி வேறொரு கிறிஸ்துவும், வேறொரு சுவிஷேசமும், வேறொரு ஆவியையும் குறித்துப் பேசுகிற திரளான கள்ள ஊழியர்கள் தோன்றிவிட்டார்கள். இயேசு என்ற நாமத்தைத் தரித்து, ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருவதினால், ஆடுகளா, பட்சிக்கிற ஓநாய்களா என்பதை இனம்கண்டுகொள்ளுவதிலும் சிரமம் காணப்படுகிறது.  நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல் அவைகள் தேவனால் உண்டானவைகளா என்பதை பகுத்தறிய வேண்டும் என்று கர்த்தர் எச்சரித்திருந்தும், ஜனங்கள் வேதத்தின் வெளிச்சம் இல்லாததினால் இடறலடைகிறார்கள். அவர்கள் கனிகளினால் அவர்களை அறிவீர்கள் என்று ஆண்டவர் ஆலோசனை சொல்லியிருந்தும், கனிகளைப்பார்க்கப் பொறுமையோடு காத்திருக்காததினால் இடறுதல் வருகிறது.  ஆகையால் தான் வேதப்புரட்டர்களுக்குப் பின்னால்கூட அதிக கூட்டம் காணப்படுகிறது. தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற உபதேசங்களையும் ஊழியர்களையும் தெரிந்தெடுத்து, எல்லாவற்றையும் வேதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்காததினால் கடைசி நாட்களில் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறார்கள். நல்ல விசுவாசிகள் கூட பிசாசின் தந்திரங்களை அறியாதபடி, அவனுக்கு எதிர்த்து நிற்பதற்கு பதிலாக இடம் கொடுத்து தங்களை தாமே வஞ்சிக்கப்பட ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள்.

அடுத்ததாக யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் என்று ஆண்டவர் எச்சரித்தார். அனேக தேசங்களில் யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கிறது, உள்நாட்டுக் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கிறது. திரளான பிள்ளைகளும், வயோதிகர்களும், தங்களைத் தற்க்காத்துக் கொள்ளத் திராணியில்லாதவர்களும், அதிகமாய் பாதிக்கப்படுகிறார்கள். சர்வாதிகாரங்களும், கம்யூனிச சித்தார்த்தங்களையும் உடைய நாடுகளில் தங்கள் எண்ணங்களுக்கு ஒத்துப்போகாதவர்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் என்ற கர்த்தருடைய வார்த்தை அப்படியே நிறைவேறிக்கொண்டு காணப்படுகிறது. தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட, அவருடைய சுவாசத்தைக் கொண்டிருக்கிற திரளான ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். இவைகளெல்லாம் கர்த்தருடைய கோபாக்கினைக்கும், வருகைக்கு அடையாளமாய் காணப்படுகிறது.

அடுத்ததாகப் பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று கர்த்தர் கூறினார். இந்தக் கடைசி நாட்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் உலக நாடுகள் முழுவதிலும் நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்,  இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே,  ஆனாலும், முடிவு உடனே வராது என்று ஆண்டவர் கூறினார். ஆனாலும் கர்த்தருடைய ஜனங்கள் இவைகளால் எச்சரிக்கை அடைந்து அவரைச் சந்திக்க ஆயத்தப்படுவோம். இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (லூக்கா 21:36). அதிகமாய் வேதம் வாசித்து, ஜெபித்து, கர்த்தரோடு நடக்க நம்மை முழுவதுமாய் அற்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar