அப்சலோமின் ஆவி (The spirit of Absalom).

அப்போது அப்சலோம் அவனை நோக்கி: இதோ,     உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது, ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான் (2 சாமு. 15:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PWCiMboBhB4

தாவீது ராஜாவிற்கு மாக்காள் மூலமாய் பிறந்த மூன்றாம் குமாரன் அப்சலோம். அவனின் சகோதரியின் பெயர் தாமார்.  அப்சலோமின்  ஒன்றுவிட்ட  சகோதரன் பெயர் அம்னோன் ஆகும். அவன் தாமாரை ஏமாற்றி அவளுக்குத் துரோகம் செய்ததினால் அப்சலோம் அவனைப் பழிவாங்குவதற்குச் சரியான  தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். இரண்டு வருடங்கள் கழிந்த பின்பு தன் வீட்டில் நடந்த விருந்திற்கு அப்சலோம்,     அம்னோனை அழைத்திருந்தான். விருந்து நடந்து கொண்டிருந்த நேரத்தில் மற்ற சகோதரர்களுக்கு முன்பு அப்சலோமின் கட்டளையின்படி அவனுடைய வேலைக்காரர்கள்  அம்னோனை கொலை செய்தார்கள். அப்சலோம் தன் தகப்பனாகிய தாவீதுக்கு பயந்து மூன்று வருடங்கள் கேசூரின்  ராஜாவினிடத்திற்கு ஓடிப்போய் அங்கே காணப்பட்டான்.  பின்பு யோவாப் தாவீதின் கட்டளையின்படி அவனை கேசூரிலிருந்து  அழைத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தான்,     ஆகிலும் தாவீது அவனைத் தன் முகத்தைப் பார்க்கும் படிக்கு அனுமதிக்கவில்லை. இரண்டு  வருடங்களுக்குப் பின்பு யோவாபின் முயற்சியினால் தாவீது அம்சலோமை அழைப்பித்தான்,     அவன் வந்து ராஜாவைத் தரையிலே  முகங்குப்புற விழுந்து வணங்கினான்,     தாவீது அவனை முத்தமிட்டு ஏற்றுக் கொண்டான். ஆகிலும் அப்சலோமின் இருதயம் தாவீதை விட்டு தூரமாகவே காணப்பட்டது. அவன் தாவீதிடம் முழுமனதோடு ஒப்புரவாகவில்லை,     அவனைப் பழிவாங்கக் காத்திருந்தான். கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளும் இப்படிப்பட்ட சுபாவங்கள் காணப்படுகிறது. அனேக வேளைகளில் ஒருவரையொருவர் மன்னித்து ஒப்புரவான பின்பும் கூட கசப்புகளை இருதயத்தில் வளரவிடுகிறவர்களாய் காணப்படுவார்கள். அவர்களுக்குள்ளாய் காணப்படுகிற கசப்பைப் பயன்படுத்தி சத்துரு அவர்களை  ஆட்கொண்டு வஞ்சித்து விடுவான்.

இதற்குப்பின்பு அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து,     பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்தில் நின்றுகொண்டு,     எவனாகிலும்  தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய்  ராஜாவிடத்தில்  நியாயத்திற்காகப் போகும்போது,     அவனை அழைத்து,     நீ எந்த ஊரான் என்று கேட்பான்,     அவன் உமது அடியான்  இஸ்ரவேல் கோத்திரங்களில்  ஒன்றுக்கடுத்த  இன்ன ஊரான் என்றால்,      அப்போது அப்சலோம் அவனை நோக்கி: இதோ,     உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது, ஆனாலும்  ராஜாவிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.  வழக்குகள் உள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து,     நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு,     என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது,     அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி,      முத்தஞ்செய்வான். இந்தப் பிரகாரமாக  அப்சலோம்  ராஜாவிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம்  செய்து,     இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். முதலாவது அப்சலோமின் ஆவி மாய்மாலமான தாழ்மை உள்ளது. இரண்டாவது என்னை  நியாயாதிபதியாகவும்,     ராஜாவும் வைப்பது நல்லது என்று மேட்டிமை கொள்வதாகக் காணப்படும். மூன்றாவது,     தாவீதினிடத்தில் அன்பாயிருக்கிற ஜனங்களையும்,     அவனைத் தேடிச் செல்வோரையும் பிரிப்பதாகும். நான்காவது,     அது ஜனங்களை கவர்ச்சிக்க முயற்சிக்கும்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     இப்படி பிசாசினால் ஏவப்படுகிற  அப்சலோமின் ஆவி உடையவர்கள் அனேகர் உங்கள் வேலை ஸ்தலங்களில்,     குடும்பங்களில்,     சபைகளில் காணப்படலாம். மாய்மாலமான தாழ்மையும்,     அகந்தையினால் நிறைந்த இருதயமும் உடையவர்களை அப்சலோமின் ஆவி எளிதாய் பிடித்து விடும். அது குடும்பங்களிலும்,     சபைகளிலும் பிரிவினையைக் கொண்டு வர முயற்சிக்கும். பெற்றோருக்கு விரோதமாய் பிள்ளைகளையும்,     பிள்ளைகளுக்கு விரோதமாய் பெற்றோரையும்,     மனைவிக்கு விரோதமாய் புருஷனையும்,     புருஷனுக்கு விரோதமாய் மனைவியையும்,     ஊழியர்களுக்கு விரோதமாய் விசுவாசிகளையும்,     விசுவாசிகளுக்கு விரோதமாய் ஊழியர்களையும் தூண்டிவிடும்.  கிறிஸ்துவின்  மணவாட்டியாகிய சபையைக்  கறைப்படுத்தி பிரிவினைகளைக் கொண்டுவருவதற்கு,      யூதாசுக்குள் புகுந்ததைப் போலச்  சிலருக்குள் புகுந்து,     அவர்களைத் தூண்டிவிடும். ஆகையால் பிசாசின் தந்திரங்கள் நாம்  அறியாதவைகள் அல்ல என்று வேதம் கூறுகிறது. ஒருநாளும் பொல்லாங்கனுக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள்,     நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து,     பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae