நீங்கள் நன்றாயிருப்பீர்கள், மிகவும் விருத்தியடைவீர்கள் (All be well with you, and you may greatly increase).

இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய  கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு (உபாகமம் 6:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/v5vYVTJKiKY

இந்தப் புதிய ஆண்டில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் நன்றாயிருப்பீர்கள்,      பலுகிப் பெருகி ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.  இஸ்ரவேல் சபை தங்கள் வனாந்தர பயணத்தை முடித்து கானானுக்குள் பிரவேசிக்கப் போகிறார்கள். அந்த வேளையில் கர்த்தர் மோசேயின் மூலமாக ஜனங்களுக்கு  சொல்லும்படிக்கு  கொடுத்த வாக்குத் தத்தமாகக் காணப்படுகிறது. நாமும் ஒரு புதிய வருடத்திற்குள்ளாய் பிரவேசித்திருக்கிறோம். இந்த வருடம் எப்படியிருக்கும் என்ற கேள்வி உங்களுக்குள்ளாய் காணப்படும். நீங்கள் நன்றாயிருப்பீர்கள்,      மிகவும் விருத்தியடைவீர்கள் என்று கர்த்தர் உங்களைப் பார்த்து கூறுகிறார். நீங்கள் நன்றாயிருப்பீர்கள் என்ற வார்த்தையை கர்த்தர் உபாகமப்  புஸ்தகத்தில்  திரும்பத் திரும்பச் சொல்லுவதிலிருந்து தகப்பனுடைய இருதயத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது  (உபா. 4:40,      5:56,      5:29,      6:3,      6:18,      6:24). நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நன்றாயிருக்க வேண்டும்,      சமாதானமாய்,      ஐசுவரியமாய்,      செழிப்பாய்,      ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாய் காணப்பட வேண்டும் என்பது கர்த்தருடைய வாஞ்சையாய் காணப்படுகிறது. தேசங்களின் சூழ்நிலைகள்  எப்படிக் காணப்பட்டாலும்,      கர்த்தரைச் சேவிக்கிற நீங்கள் நன்றாய் காணப்படுவீர்கள். மொர்தெகாய் தன் ஜனங்களுடைய நன்மையை நாடுகிறவனாய் காணப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் பரலோகத்தின் தேவன் நீங்கள் நன்றாயிருப்பதை எவ்வளவு அதிகமாய் விரும்புவார்.

ஆதிப்பெற்றோராகிய ஆதாம் ஏவாளைப் பார்த்து,      நீங்கள்  பலுகிப்  பெருகி,      பூமியை நிரப்புங்கள் என்று கர்த்தர் கூறினார்.  இஸ்ரவேல் சபையைப் பார்த்து,      நீங்கள் வானத்து நட்சத்திரங்களாய்  விருத்தியடைந்து  பலுகிப் பெருகுவீர்கள் என்றார். அதுபோல கர்த்தர் உங்களையும் வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்  இடங்கொண்டு  பெருகும்படிக்குச் செய்வார். நீங்கள் விசுவாசத்தோடு உங்கள் எல்லைகளை விசாலமாக்குங்கள்,      உங்கள் வாசஸ்தலங்களின் திரைகளை விரிவாக்குங்கள்,      உங்கள் கயிறுகளை நீளமாக்கி,      உங்கள் முளைகளை உறுதிப்படுத்துங்கள்,      நீங்கள் விருத்தியடையும் படிக்கு எடுக்கிற முயற்சிகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.  யாபேசின் எல்லையைப் பெரிதாக்கின தேவன் உங்கள் எல்லைகளைப் பெரிதாக்குவார்.   பிலேயாம்  மலையுச்சியிலிருந்து  இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து,      யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்?  இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? என்று கூறினான். அதுபோல சபைகள் பலுகிப் பெருகும். விசுவாசிகளின் எண்ணிக்கைப் பெருகும். ஆத்துமாக்கள் சபையை நாடி,      ஓடி வருவார்கள்,      கர்த்தருடைய வைராக்கியம் அதைச் செய்யும். அதுபோல,      கர்த்தர் உங்கள் ஆயுசின் நாட்களைப் பெருகப்பண்ணுவார். ஆரோனுடைய உலர்ந்து போன கோல் துளிர்த்ததைப் போல உங்கள் ஆரோக்கியத்தையும் சுக வாழ்வையும் துளிர்க்கப் பண்ணுவார். உங்கள்மேல் நீதியின் சூரியனாய் கர்த்தர் உதிப்பார்,      அவருடைய செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்,      நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய்,      கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். 

வேதத்தில் இரட்சிப்பைத் தவிர,      மற்ற ஆசீர்வாதங்கள் எல்லாம் நிபந்தனைகளோடு கூடியவை. நீங்கள் நன்றாயிருந்து,      மிகவும் விருத்தியடைந்து,      உங்கள் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை அதே  வேதப்பகுதியில் உபாகமம் 6:1-5ஐ வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம். முதலாவது கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்யுங்கள் என்று முதல் வசனம் கூறுகிறது. கர்த்தருக்கு  எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான். அநீதியான,      துன்மார்க்கமான,      பாவக் காரியங்களில் ஒருநாளும் ஈடுபடாதிருங்கள். இரண்டாவது,      உங்கள் பிள்ளைகளோடு பெற்றோராகிய நீங்களும் கர்த்தர் விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு ஜீவியுங்கள். இந்நாட்களில் வசனங்கள் திரளாய் விதைக்கப்படுகிறது. ஆனால் அதைக் கைக்கொள்ளுகிற ஊழியர்களும்,      விசுவாசிகளும் மிகக்குறைவு. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்,      கேட்கிறவர்களும்,      இதில்  எழுதியிருக்கிறவற்றைக்  கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்  என்று வெளி. 1:3 கூறுகிறது. கர்த்தர் தம்முடைய வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கிறார். மூன்றாவது,       உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில்; முழு இருதயத்தோடும்,      முழு ஆத்துமாவோடும்,      முழுப் பலத்தோடும் அன்புகூருங்கள். அவரில் அன்புகூர்ந்து ஆராதியுங்கள்,      சேவியுங்கள்,      அவர் சமூகத்தை நாடுங்கள். ஆண்டவர் பேதுருவிடம்,      இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றதைப் போல நம்மிடமும் கேட்கிறார். கர்த்தருக்குப் பயந்து,      அவர் வசனங்களைக் கருத்தாய் கைக்கொண்டு,      அவரிடத்தில் அன்புகூர்ந்து வாழும் போது,        நீங்கள் நன்றாயிருப்பீர்கள்,      மிகவும் விருத்தியடைந்து பெருகுவீர்கள்,      உங்கள் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae