மாற்கு 15:43. கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/jBv26o-NOdE
இயேசு கிறிஸ்து ஊழியத்தை தொடங்கியபோது, தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டார் என்று மாற்கு 3:14 கூறுகிறது. இவர்கள் இயேசுவின் சீஷர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் பேதுரு, யாக்கோபு, யோவான் இயேசுவோடு நெருக்கமாக இருந்தனர். அதில் யோவான் இயேசுவுக்கு அன்பான சீஷன் என்று பெயர்பெற்றிருந்தான். பேதுரு நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தான். மறுரூப மலையிலும், கெத்செமனேயிலும் இந்த மூவரும் இயேசுவோடு இருந்தனர். இவர்களல்லாது, இன்னும் எழுபது பேரும் சீஷர்களாக இருந்தனர் என்று வேதம் கூறுகிறது.
ஆனால் இவர்களல்லாத வேறொரு சீஷனைக் குறித்து இங்கே பார்க்கிறோம். இவரைக்குறித்து யோவான், அவன் அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு என்று குறிப்பிடுகிறார். ஆனால் மத்தேயு இவரை, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்று குறிப்பிடுகிறார். லூக்காவோ, இவரை ஒரு ஆலோசனைக்காரன் என்றும் அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான் என்றும் அவன் தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவன் என்றும், அவன் யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான் என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.
இயேசுவின் பாடு மரணத்தின் சமயத்தில் அவரோடிருந்த யாரும் அவருக்காக பேசியதாக வேதத்தில் குறிப்பிடவில்லை. இயேசுவை நேசித்த, அவரை பின்பற்றின, அவரிடமிருந்து பல நன்மைகளைப் பெற்ற அநேகர் இருந்தபோதிலும், அவருக்காக பேச துணிந்த யாரையுமே காணமுடியவில்லை. ஆனால் எந்த நன்மையையும் பெற்றதாக அறியமுடியாத அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் என்று மாற்கு குறிப்பிட்டுள்ளார். இந்த யோசேப்பு ஒரு காலத்தில் அந்தரங்க சீஷனாக இருந்தது மெய்தான். ஆனால் தன்னுடைய குருவுக்கு எதிராக சதி நடக்கிறது என்றதும், சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க போகிறார்கள் என்றதும், தான் பதவிவகித்த ஆலோசனை சங்கத்தில் தனது எதிர்ப்பை பதிவிடுகிறார். இதைத்தான் லூக்கா “இயேசுவின் மரணத்திற்கு அவன் சமாதியாத போதிலும்” என்று குறிப்பிடுகிறார்.
ஒருவேளை அவருடைய பேச்சு ஆலோசனை சங்கத்தில் எடுபடவில்லையென்றாலும், இயேசுவுக்காக தன்னால் ஏதாவது செய்யக்கூடுமா என்று ஏங்கிக்கொண்டிருந்த போது, இயேசு வானத்திற்கும் பூமிக்கும் நடுவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். இந்த சூழ்நிலையில் யாராலும் உதவி செய்ய முடியவில்லை. அவருடைய சரீரத்தை கேட்டு வாங்கி அடக்கம்பண்ண ஒருவரும் முன்வரவில்லை. ஏற்கனவே தன்னுடைய ஆலோசனை நிராகரிக்கப்பட்ட அந்த சம்பவம் தன் கண்முன் வந்து போகிறது. அதேவேளையில் தான் ஒரு இயேசுவின் சீஷன் என்பதைத் தன் உள்ளம் கூறுகிறது. ஒரு முடிவோடு பிலாத்துவிடம் துணிந்து செல்கிறான். இயேசுவின் சரீரத்தை தன்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டு வாங்கினார். மேலும் “தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து’ தன் பணியை செய்து முடிக்கிறார். இதுவே இயேசுவைக்குறித்து சொல்லியுள்ள “துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்;” (ஏசாயா 53:9a) என்ற தீர்க்கதரிசன வசனத்தின் நிறைவேறுதலாய் முடிகிறது.
ஆம் தேவனுடைய ஜனங்களே, இந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவுக்காக பரிந்து பேசினான். தன் பதவி அந்தஸ்து எல்லாவற்றையும்விட இயேசுவின் சீஷன் என்ற பட்டத்தை மேன்மையாக எண்ணினான். இயேசுவுக்காக தனக்கென்று வைத்திருந்த செல்வத்தையும் கொடுத்தான். இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் சற்று சிந்திப்போம். இந்த உலகத்திலே எவ்வாறு நம்மை அடையாளம் காட்டுகிறோம் அல்லது காட்ட விரும்புகிறோம்? எதை இயேசுவுக்காக செய்யப்போகிறோம்? எதை இயேசுவுக்காக கொடுக்கப்போகிறோம்? இன்றே தீர்மானிப்போம்.
பவுல் இவ்வாறு கூறுகிறார்: என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் என்று. (I தீமோத்தேயு 1:12)
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
John Finny
Word of God church
Doha – Qatar
www.wogim.org