இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன் (Behold, I will do a new thing).

இதோ,     நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும்,     அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசாயா 43:19).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vt1YhFu2BD4

கர்த்தருடைய ஜனங்கள்,     கடந்த கால தோல்விகளையும்,     அவமானங்களையும்,     கஷ்டங்களையும்,     வியாதிகளையும்  நினைத்து,     சோர்ந்து போனவர்களாய் காணப்படாதிருங்கள்.  அவைகள் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடைகளாகவும்,     தொடர்ந்து ஜெயமாக ஓடுவதைத் தடைசெய்வதாகவும்  காணப்படும். அப்படிப்பட்ட முந்தின காரியங்களை நினைக்கவேண்டாம்,     பூர்வமானவைகளைச்  சிந்திக்கவேண்டாம் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.  இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் சீயோனை நினைத்து அழுது கொண்டிருந்தார்கள். பாபிலோனிய ஜனங்கள்; சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? தேவனுடைய அன்பையும்,     சுவிஷேத்தையும் புறஜாதிகளுக்கு அறிவிக்கத் தருணம் கிடைத்தும்,     முடியாமல் காணப்பட்டார்கள்.  அதிகமான சோர்வு அவர்களுக்குள் காணப்பட்டது. அதுபோல இஸ்ரவேல் சபை  வனாந்தரத்தில்  காணப்பட்ட வேளையில்  எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும்,     வெள்ளரிக்காய்களையும்,     கொம்மட்டிக்காய்களையும்,     கீரைகளையும்,     வெண்காயங்களையும்,     வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம்.  இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது,     இந்த மன்னாவைத் தவிர,     நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று முறுமுறுக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். அவர்களுக்குள் காணப்பட்ட சோர்வு தேனிட்ட பணியாரம் போலக் காணப்பட்ட தேவதூதர்களின் உணவாகிய மன்னாவின் மேன்மையை மறக்கும் படிக்குச் செய்தது. நாம் முந்தின தோல்வியின் காரியங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்யமுடியாமல் போய்விடும்.

கர்த்தர் உங்களுக்கு ஒரு புதிய காரியத்தை இப்பொழுது செய்வேன் என்று வாக்குக் கொடுக்கிறார். அவர்  வனாந்தரத்திலே வழியையும்,     அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிறவர்.  வனாத்திரத்தில் வழியையும்,     ஆறுகளையும் தோன்றப்பண்ணுவது கடினமானது. ஆனால் கடினமானது என்று சொல்ல இயேசுவுக்கு ஒன்றுமில்லை. அவரால் எல்லாம் கூடும்,     அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்.  அவர் அறியாத படி உங்கள் வாழ்க்கையில் ஒன்றும் சம்பவிப்பதில்லை. அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஆகையால் இதுவரை  உங்கள் வாழ்க்கையில் சம்பவித்தவைகள்  அனைத்தும் நன்மைக்கேதுவாகவே நடந்தது என்று விசுவாசியுங்கள்.  ரூத் மோவாபிய தேசத்தை நினைக்கவில்லை,     தன் உறவினர்களைக் குறித்து நினைக்கவில்லை. அவள் தன் வாழ்க்கையில் புதிய காரியத்தைச் செய்ய வல்லமையுள்ள தேவனை நோக்கிப் பார்த்தாள். ஆகையால் தைரியமாய் முந்தின வாழ்க்கையை விட்டுவிட்டு நகோமியோடு கூட பெத்லகேமிற்கு வந்தாள். கர்த்தர் அவள் வாழ்க்கையில் புதிய காரியத்தைச் செய்தார்.  போவாசின்  மனைவியாகும் படிக்குச் செய்தார்.  ஓபேத்தை  பெற்று  எடுக்கும்படிக்குச்  செய்தார். ஒபேத் ஈசாயின் தகப்பன்,     ஈசாய் தாவீதின் தகப்பன்,     தாவீதின் குமாரனாய் இயேசு பிறந்தார். இயேசுவின் கொள்ளுப்பாட்டியாகும் பாக்கியம் ரூத்திற்கு கிடைத்தது. கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தைக் கர்த்தர் இப்பொழுது செய்து உங்களை கனம் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar