கர்த்தருடைய வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோவீர்கள். (By His light, you will walk through darkness).

அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது, அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன் (யோபு 29:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QZhDVZ-kNdM

யோபு உபத்திரவங்கள் வழியாகக் கடந்து சென்ற வேளையில்,      அவனுடைய செழிப்பின் நாட்களை நினைத்துப் பார்த்தான். தன் மனைவி,      பிள்ளைகளோடு வாழ்ந்த மகிழ்ச்சியின் நாட்களை நினைத்து ஏங்கினான். அந்நாட்களில் தேவன் அவனைக் காப்பாற்றி வந்தார். அவனுக்கு எல்லா சீரும் ஆசீர்வாதங்களும் உண்டாயிருந்தது. கர்த்தருடைய தீபம் அவன் தலையின் மேல் பிரகாசித்தது. கர்த்தருடைய இரகசியச் செயல் அவன் கூடாரத்தின் மேலிருந்து. சர்வ வல்லமையுள்ள தேவன் அவனோடிருந்தார். அவன் பாதங்களை நெய்யினால் கழுவுகிறவனாய் காணப்பட்டான். அந்த நாட்கள் இப்போதும் இருந்தால் நலமாயிருக்கும் என்று மீண்டும் அதை வாஞ்சித்தான். இளையக் குமாரன் பன்றிகளுடைய உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட வேளையில் தன் தகப்பன் வீட்டில் செல்வச் செழிப்பாய் வாழ்ந்த நாட்களை நினைத்து ஏங்கினான். யோசேப்பு பதிமூன்று வருடங்கள் அடிமைத்தனத்திலும்,      சிறைச்சாலையிலும் பலவிதமான பாடுகளை அனுபவித்த வேளையில் தன் தகப்பன் யாக்கோபோடு வாழ்ந்த மகிழ்ச்சியின் நாட்களை நினைத்து ஏங்கினான். கர்த்தருடைய பிள்ளைகளே நாமும் கடினமான சூழ்நிலைகளில் கடந்து செல்லும் போது,      முந்தின நாட்களின் சீரை நினைத்துப் பார்த்து ஏங்குவது உண்டு. திருமண வாழ்க்கைக்குள் புதிதாய் பிரவேசித்த பெண் பிள்ளைகள்,      குடும்பங்களில்  பிரச்சினைகளைச் சந்திக்கும் போது,      தன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைத்து அதற்காய் ஏங்குவார்கள். திடீரென்று வியாதிகள் நம்மைத் தாக்கி படுக்கையில் காணப்படும் போது,      ஆரோக்கியமாய் வாழ்ந்த மகிழ்ச்சியின் நாட்களை நினைத்துப் பார்க்கிறவர்களாய் நாம் காணப்படுவோம். வேலைகளை இழந்து கஷ்டப்படும் போது,      நல்ல வேலைகளில் காணப்பட்ட,      செழிப்பாய் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களை நினைத்து கண்ணீர் விடுபவர்களும் உண்டு.

யோபு கர்த்தர் அருளின வெளிச்சத்தினால் எல்லா இருளான சூழ்நிலைகளையும் தாண்டிச்சென்றான். அது போல உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா இருளான சூழ்நிலைகளையும் நீங்கள் கடந்து செல்லுவீர்கள். இயேசு,      நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா இருளின் நிலைகளை மாற்றுவதற்காக இந்தப் பூமியில் வந்தார். அவரிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவனெனும்  இருளில் இராதபடிக்கு,      அவர் உலகத்தில் ஒளியாக வந்தார் (யோவான் 12:26). உங்கள் விசுவாசம் இயேசுவிடத்தில் உறுதியாக இருக்கட்டும்,      அப்போது அவர் உங்கள் இருளை வெளிச்சமாக்குவார். இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்து கொண்டு வந்த நாட்களில்,      பலவிதமான கட்டுகள்,      வியாதிகள்,      பிசாசின் பிடியில் அகப்பட்ட ஜனங்கள் அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களைப் பார்த்து என்னால் இதைச் செய்யமுடியும் என்று விசுவாசிக்கிறாயா? விசுவாசிக்கிறேன் என்று சொன்ன அத்தனைப் பேருக்கும் அவர் அற்புதங்களைச் செய்து மகிழப்பண்ணினார். ஆகையால் உங்கள் விசுவாசத்தினிமித்தம் உங்கள் இருளை நீங்கள் கடந்துசெல்லுவீர்கள். கர்த்தருடைய வசனம் நம்முடைய  கால்களுக்குத் தீபமும் பாதைகளுக்கு வெளிச்சமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. பாதைகள் இருளாய் தோன்றுகிறதா?  அடைபட்டுப் போனது போலத் தென்படுகிறதா? கோணலும்,      கரடுமுரடுமாய் காணப்படுகிறதா? கர்த்தருடைய வசனத்தை வாசியுங்கள்,      அதைத் தியானம் செய்யுங்கள்,       அதற்குக் கீழ்ப்படியுங்கள்,      அப்பொழுது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற இருளை அகற்றி வெளிச்சமாக்குவார். தாவீது,      தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்,        என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவீர் என்றும் நம்பிக்கையோடு சொன்னான். கர்த்தர் அப்படியே அவனுக்குச் செய்தார். மரண இருளின் பள்ளத்தாக்கில் அவன் நடந்த வேளைகளிலெல்லாம் அவனோடிருந்து,      ஆட்டிடையனாய் காணப்பட்ட அவனைக் கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்தினார். அவன் இஸ்ரவேலின் விளக்காய் காணப்பட்டான் (2 சாமு. 21:17) என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,      நீங்களும் உலகத்திற்கு வெளிச்சமாய் காணப்படுகிறீர்கள்,      மலைமேல் இருக்கிற பட்டணம் போல,      விளக்குத் தண்டின் மேலிருக்கிற விளக்கைப் போல வெளிச்சம் வீசுங்கள்,      அப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா இருளையும் கடந்துபோவீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar