எருசலேமே,     கர்த்தரை ஸ்தோத்திரி  (Praise the Lord, O Jerusalem).

எருசலேமே,     கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே,     உன் தேவனைத் துதி (சங்கீதம் 147:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Y5mZQLpLV3o

எருசலேம்,     சீயோன் என்பது கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. கர்த்தரை ஸ்தோத்தரிப்பதும்,     துதிப்பதும்  நம்முடைய பிரதான நோக்கமாய் காணப்படவேண்டும். துதித்தலே இன்பமும்,     கர்த்தருடைய பார்வையில் ஏற்றதுமாய் காணப்படுகிறது. அவர் நம்முடைய வாழ்க்கையில் இதுவரைச் செய்த நன்மைகளை நினைத்துத் துதி,     ஸ்தோத்திர பலிகளை  ஏறெடுக்கும் போது,     இன்னும் கர்த்தர் நம்மை  நினைத்தருளி  மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.  

கர்த்தருக்கு நீங்கள் துதி பலிகளை ஏறெடுக்கும் போது,     அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,     உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.  அவர் உன் எல்லைகளைச்  சமாதானமுள்ளவையாக்கி,     உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் (சங். 147:13,    14).  வாசல்களின் தாழ்ப்பாளைப் பலப்படுத்துவது என்பது,     கர்த்தருடைய பாதுகாப்பைக் குறிக்கிறது. கர்த்தர் பத்து வாதைகளை அனுப்பி எகிப்தை வாதித்த போது,     அதே பகுதியில்  குடியிருந்த  எபிரேயர்களுடைய வீட்டை ஒரு வாதையும் தொடவில்லை. அதற்குக் காரணம்,     கர்த்தருடைய பாதுகாப்பு அவர்களோடு இருந்தது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் வாசல்களின் நிலைக்கால்களிலும்  மேல்சட்டத்திலும் பூசப்பட்டிருந்ததினால் சங்கார தூதனாலும் அவர்களைத் தொடமுடியவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் கர்த்தருக்குத் துதி,     ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கும் போது,     இந்த பாதுகாப்பற்ற உலகத்தில் கர்த்தர் உங்களையும்,     உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பார். அதுபோல உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து,     அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் கட்டளையிடுவார். நம்முடைய பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்திற்காக,     எவ்வளவு பிரயாசங்களை எடுத்தாலும்,     குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும் ஜெயம் கர்த்தரால் வரும் என்று வசனத்தின்படி,     காரியசித்தியை உண்டுபண்ணுகிறவர் கர்த்தர். ஆகையால் பிள்ளைகளுக்காக  ஆண்டவருக்குத் துதி,     ஸ்தோத்திர பலிகளை ஏறெடுங்கள். அவர்கள் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.

கர்த்தர் உங்கள் எல்லைகளை  சமாதானமுள்ளவையாக்குவார்.  கிதியோனின் நாட்களில்,     இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டு சோரம்  போனதினிமித்தம்,     தேசத்தின் எல்லைகளில் சமாதானம் இல்லாமல் இருந்தது. இவர்களுடைய தானியங்கள்,     ஆடுமாடுகளை எல்லாம் மீதியானியர்கள்  கொள்ளையடிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள்.  கிதியோனின் மூலம் கர்த்தர் விடுதலையைக் கொடுத்த வேளையில் அவன் கர்த்தருக்கு  யெகோவா ஷாலோம் என்ற பெயரைப் போட்டான். சமாதானத்தை அருளுகிற சமாதான பிரபு அவர். அதுமாத்திரமல்ல,     உச்சிதமான கோதுமையினால் உங்களைத் திருப்தியாய் ஆசீர்வதிக்கிறவர்.  யெகோவா யீரே என்பது கர்த்தருடைய நாமம். அவர் உங்கள் தேவைகளை சந்திக்கிறவர். சிங்கக்குட்டிகள் கூட தாழ்ச்சியடைந்து  பட்டினியாயிருக்கலாம்,      ஆனால் கர்த்தரைத் தேடுகிற கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆகையால் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை எப்பொழுதும் கர்த்தருக்குச் செலுத்துங்கள். அப்போது கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar