உன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். (God will turn your wailing into dancing).

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு,     மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்(சங்கீதம் 30:11).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/2hi3psTQ3-4

மகா வேதனையின் அழுகையைப் புலம்பல் என்று கூறுகிறோம்.  யோசேப்பு மரித்துப் போனான்,      ஒரு துஷ்ட மிருகம்  அவனைப்  பட்சித்துப்போட்டது என்பதை அறிந்த  யாக்கோபு  யோசேப்பு  பீறுண்டுபோனான் என்று புலம்பி,     தன் வஸ்திரங்களைக் கிழித்து,     தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு,     அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.  அவனுடைய மற்ற குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்,     ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல்,     நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்று கூறி அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.  யாக்கோபு  யோசேப்பின் மேல் வைத்திருந்த அன்பு அதிகமாயிருந்ததால் அவனுடைய மரணத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,     அவனுக்காகப் புலம்புகிறவனாய் காணப்பட்டான். ஆனால் திடீரென்று ஒரு நாள் யோசேப்பு  உயிரோடிருக்கிறான்,     எகிப்து தேசத்திற்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான்  என்று கேள்விப் பட்டு,     அவன் அனுப்பின வண்டிகளையெல்லாம் கண்ட போது ஆச்சரியப்பட்டு,     அந்தச் செய்தியை நம்பமுடியாதவனாய் காணப்பட்டான். கர்த்தர் அவனுடைய புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றினார்.


கர்த்தருடைய பிள்ளைகளே,     வேதம் கூறுகிறது,     அழ ஒரு காலமுண்டு என்றால் நகைக்கவும் ஒரு காலமுண்டு,     புலம்ப ஒரு காலமுண்டு என்றால் நடனம் பண்ணவும் ஒரு காலமுண்டு என்பதாக. உங்கள் புலம்பல்களையும்,     அழுகையையும் மாற்றி கர்த்தர் உங்களை நகைக்கப் பண்ணுவார். ஆகையால் ஒருநாளும் சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தர் விழுந்து போன வாழ்க்கைகளைத் திரும்ப  எடுத்த கட்டுகிறவர். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே,     மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்,     நீ கட்டப்படுவாய்,     மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் என்று கர்த்தர் கூறுகிறார்.  ரூத்தின் வாழ்க்கையைத் திரும்பவும் அழகாய் எடுத்துக் கட்டின தேவன்,     உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் எடுத்துக் கட்டுவார். கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து,     தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்,     கர்த்தரே இதைச் சொன்னார் என்று ஏசாயா தீர்க்கன் எழுதினார். ஆகையால் கர்த்தர் உங்கள் நிந்தைகளைப் புரட்டி போட்டு,     உங்கள் கண்ணீரைத் துடைத்து உங்களை மகிழப்பண்ணுவார். கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம்,     அவருடைய தயவோ நீடிய வாழ்வு,     சாயங்காலத்தில் அழுகை தங்கும்,     விடியற்காலத்திலே  களிப்புண்டாகும். அழுகைக்கும் களிப்பிற்கும் இடைப்பட்ட காலநேரம் குறுகினதாய் காணப்படுகிறது. ஆகையால் துரிதமாய் கர்த்தர் உங்கள் புலம்பலையும்,     அழுகையையும் மாற்றுவேன் என்று வாக்குக் கொடுக்கிறார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். இயேசு கூறினார்,     சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்படுத்தவும்,     அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்,     துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும்,     ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்,     பிதாவாகிய தேவன் என்னை அனுப்பினார் என்று. ஆகையால் உங்கள் நம்பிக்கையை இயேசுவின் மேல் வையுங்கள். அவர் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
http://www.wogim.org
https://youtube.com/uthamiyae