நான் அவர் அல்ல (I am not that one):-

அப் 13:25. யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UluDlmxzLC4

பவுல் அந்தியோகியாவிலுள்ள ஜெப ஆலயத்தில் கூடிவந்திருந்த இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் பிரசங்கம் செய்தான். அப்பொழுது யோவான் ஸ்நானகன் குறிப்பிட்டு சொன்ன ஒரு வார்த்தையை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறான். யோவான் ஸ்நானகன் சொன்னான் நான் அவர் அல்ல என்பதாக. அதாவது ஒருபோதும் எந்த காரணத்தாலும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மகிமையையும் சாதாரண மனிதனாகிய எனக்கு கொடுத்துவிடாதிருங்கள் என்பதாக சொல்லுகிறான்.

அலெக்சாண்டர் என்ற ஊழியக்காரர் இந்தியாவில் மிஷினிரியாக ஊழியம் செய்து வந்த வில்லியம் கேரி அவர்களை சந்திக்க வந்தார். அந்நேரத்தில் வில்லியம் கேரி உடல் சுகவீனத்துடன் தன் வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருந்தார். அவரை பார்க்க சென்ற அலெக்சாண்டர் என்ற ஊழியக்காரர், வில்லியம் கேரி இயேசுவுக்காக செய்த மகத்தான ஊழியத்தை குறித்தும், அவருடைய தியாகமான பல செயல்களை குறித்தும் அதிக நேரம் பேசிக்கொண்டே இருந்தார். அதை கேட்டு சலிப்படைந்த வில்லியம் கேரி, அவர் பேசுவதை நிறுத்தி, தனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே அந்த ஊழியக்காரர், வில்லியம் கேரி அவர்களுக்காக ஜெபித்து விட்டு, அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல ஆயத்தமானார். அவர் கடந்து செல்லுகையில் வில்லியம் கேரி, அந்த ஊழியக்காரரை செய்கையால் அழைத்து மெதுவான குரலில் சொன்னார், நான் மரித்த பிறகு வில்லியம் கேரியை பற்றி ஒன்றும் கூற வேண்டாம்; மாறாக வில்லியம் கேரியின் இரட்ச்சகரை குறித்து அதிகமாக எல்லாரிடமும் சொல்லுங்கள் என்று கூறினார். யோவான் ஸ்நானகனும் அதே மாதிரிதான், அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று கூறினான். பவுலும் தன் மூலமாக கிறிஸ்து ஒருவரே மகிமைபடவேண்டும் என்று கூறினான். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்பதாக கூறினான். பேதுருவும் இப்படியாக சொல்லுவான் எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக என்பதாக.

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் கர்த்தருக்காக செய்கிற எந்த காரியத்திலும் நான், என்னால் வந்தது என்று ஒருநாளும் பேசாமல் இருக்கும்படி நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய மகிமையில் ஒரு சதவிகிதம் கூட நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க கூடாது. சில மூத்த நல்ல ஊழியக்காரர்கள் சொல்லுவார்கள் என்னை நம்பி நீங்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம். என்னால் உங்கள் தலைவலியை கூட சுகப்படுத்த முடியாது என்பதாக. அதுபோல எல்லா காரியத்திலும் ஆண்டவருக்கே துதியையும், கனத்தையும், மகிமையையும் செலுத்துவோம். அதுவே கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae