அமரிக்கையும், நம்பிக்கையும் (Quietness and Confidence):-

ஏசாயா 30:15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0F2pEBFUHmc

கர்த்தருக்கு காத்திருக்கிருக்கும்போது புதுபெலன் அடைவீர்கள். பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற உங்களுக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அதுபோல, அமரிக்கையும் நம்பிக்கையும் உங்களுக்கு பெலனாய் இருக்கும் என்று வசனம் கூறுகிறது.

சில சந்தர்ப்பங்களில் பொறுமையை இழந்து மற்றவர்கள் மீது கோபம்கொள்ளுகிறோம். சிலருக்கு பதிலுக்கு பதில் மற்றவர்களை பேசாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. யாரவது விரோதமாக செயல்பட்டால், பதிலுக்கு மற்றவர்களை புண்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் மோசே தனக்கு விரோதமாக மற்றவர்கள் பேசியபோது அவன் எப்படி இருந்தான் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மோசேக்கு விரோதமாக ஆரோனும் மிரியாவும் பேசினார்கள். அதை கேட்ட மோசே அமரிக்கையாய் இருந்தான். அமைதியாக பொறுமையை இழக்காமல் இருந்தான். பேசியது என்னுடைய சகோதரி தானே, பரவாயில்லை என்று அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. மோசே கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்று அமைதியாக இருந்தான். இந்த வேலையில் கர்த்தர் அவர்கள் பேசினதை கேட்டார், மோசேக்காக அவர் வழக்காடுகிறவராக காணப்பட்டார். நீங்கள் சும்மாயிருங்கள் இந்த யுத்தம் கர்த்தருடையது என்று வசனம் சொல்லுகிறது. மனிதர்கள் எதிராக வரும்போது, நாம் அமைதியாய் இருப்பது கோழைத்தனமல்ல, மாறாக, நாம் அமரிக்கையாய் இருப்பது தேவபெலன் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக அமரிக்கையாய் இருங்கள்.கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.

அதுபோல, கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருப்பது தேவபெலன் என்று வசனம் கூறுகிறது. ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாது. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் என்று வசனம் கூறுகிறது. ஆபிரகாம் தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அதை கர்த்தர் நீதியாக கண்டார். கர்த்தர் மேல் உங்கள் பாரங்களையெல்லாம் நம்பிக்கையோடு வைத்துவிடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார். எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் மேல் அசையாது நம்பிக்கைகொள்ளுவது உங்களுக்கு பெலனாய் இருக்கட்டும். உங்கள் எதிர்காலம் கர்த்தருடைய கரத்தில் பத்திரமாக இருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளாக இருக்கட்டும். நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள். நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar