என் புறாவோ,     என் உத்தமியோ ஒருத்தியே (My dove, my undefiled is but one).

என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே, அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை, அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள், குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள், ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள் (உன். 6:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EJM9PKHeUwk

சாலொமோன் மூவாயிரம் நீதிமொழிகளையும்,     ஆயிரத்து ஐந்து பாடல்களையும் பாடினான். அந்தப்பாடல்களில் சில பாடல்கள் உன்னதப்பாட்டாய் காணப்படுகிறது. தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் கொண்ட அன்பையும்,     இயேசு சபையின் மேல் கொண்ட அன்பையும்  உன்னதப்பாட்டு  வெளிப்படுத்துகிறது. ஆண்டவர் சபையை என் புறா என்றும்,     என் உத்தமி என்றும் உரிமை பாராட்டி அழைக்கிறார். என் சபையைக் கட்டுவேன்,     என் ஜெபவீட்டில் அழைத்துக் கொண்டு வந்து உங்களை மகிழப் பண்ணுவேன்,     என் பிதாவின் வீடு என்றும் கர்த்தர் சபையை அழைப்பதிலிருந்து அவருடைய அன்பு வெளிப்படுகிறது. சபை மக்களாகிய நீங்கள் அத்தனை பேரும் கர்த்தருடையவர்கள்,      விஷேசித்தவர்கள். இஸ்ரவேல் என்னுடைய குமாரன்,     என்னுடைய சேஷ்டபுத்திரன் என்று கர்த்தர் கூறினார். இஸ்ரவேலே,     நீ பாக்கியவான்,     கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே,     உனக்கு ஒப்பானவன் யார்? என்று கர்த்தர் கேட்டார். ஆகையால் நீங்கள் பாக்கியவான்களாய்,     பாக்கியவதிகளாய் காணப்படுகிறீர்கள்.

மணவாட்டி சபையை,     ஆண்டவர் புறாவோடு ஒப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது. புறா ஒரு சுத்தமான பறவை,     சுத்தமான உணவு தானியங்களை மாத்திரம் உட்கொள்ளும். அதன் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்கும். தன் ஜோடியோடு எப்பொழுதும் ஐக்கியமாய் காணப்படுவதை விரும்பும். அதுபோல சபை ஜனங்களாகிய நாமும் பரிசுத்தத்தை அதிகமாய் வாஞ்சிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று ஆண்டவர் கூறினார். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும்   புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை. கடைசி நாட்களில் மணவாட்டியைக் கறைபடுத்தும்படிக்கு சத்துரு எல்லாவிதங்களிலும் முயல்கிறான். அவன் ஆதிமுதல் பாவம் செய்கிறவனாய் காணப்படுவதினால்,     ஜனங்களையும் பாவத்திற்குள்ளாக நடத்தி,     கடைசியில் தன்னோடு அக்கினி கடலில் சேர்க்கும் படிக்கு விரும்புகிறான். கர்த்தருடைய பிள்ளைகளே,      யோசேப்பை போலப் பாவத்திற்கு விலகியோடுங்கள்,       தானியேலைப் போல என்னைத்  தீட்டுப்படுத்துவதில்லை  என்று தீர்மானியுங்கள். கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி,     புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது  என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட கர்த்தருடைய வசனமாகிய மன்னாவை அனுதினமும் உட்கொள்ளுங்கள். கடைசி நாட்களில் வசனம் கேட்கக் கூடாத பஞ்சகாலம் வருகிறது என்று வேதம் எச்சரிக்கிறது. வேறொரு சுவிஷேசம் அறிவிக்கப்படுகிற நாட்களில் வாழ்ந்து வருகிறோம். ஆகையால் சுத்த  சுவிஷேசத்தை பகுத்தறிந்து,     அந்த வசனத்தின் வெளிச்சத்தில் நடக்க உங்களை அர்ப்பணியுங்கள். எசேக்கியா ராஜா,     புறாவைப்போல் புலம்பினேன்,      என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் என்றேன் என்று ஜெபித்தான். அவன் மரிக்கப்போகிறான் என்று கர்த்தர் கூறியவுடன் புலம்பி அழுது ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான்.  எரேமியா தீர்க்கன்,     என் கண்கள் கண்ணீரூற்றுமானால்  நலமாயிருக்கும்,     அப்பொழுது என் ஜனத்திற்காக நான் இரவும்பகலும் அழுவேன் என்றான். இயேசுவின் கண்கள் புறாக்கண்களைப் போல எப்போதும் கண்ணீரால் நிறைந்திருந்தது,     பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கிறவராகக் காணப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,     நாமும் கண்ணீர் சிந்தி ஜெபிக்கிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது என்பதை மறந்து போகாதிருங்க்ள்.  ஆண்டவரோடு ஐக்கியமாய் காணப்படுங்கள்,     ஏனோக்கைப் போல ஆண்டவரோடு சஞ்சரியுங்கள்,     அவருடைய சமூகத்தை விட்டு ஒருபோதும் பிரிந்து விடாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் என் புறாவே,     என் உத்தமியே என்று அழைத்து,     உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுவார்.    

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://wogim.org
https://youtube.com/uthamiyae