இயேசுவின் பிறப்பும், இரண்டாம் வருகையும் (The birth and second coming of Jesus):-

மத் 1:16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்
1 கொரி 16:22. ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Jh5aSB8Yxdw

உலகளாவிய கிறிஸ்துவர்கள் விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகையாய் காணப்படுகிறது. இயேசுவின் பிறப்பு நிகரற்றது, அதே போல அவருடைய வருகையும் நிகரற்ற காரியம் என்பதை அவருடைய பிறப்பை நினைவுகூருகிற நாம் அறிந்துகொள்ள வேண்டும். நான்கு சுவிசேஷங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுவின் வருகையை பற்றியோ நான்கு சுவிசேஷங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. நடபடிகள் மற்றும் நிருபங்களில் கிறிஸ்துமஸை குறித்து எழுதப்பட்டவைகளை காட்டிலும் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து எழுதப்பட்டவைகளே அதிகம். இயேசுவுன் பிறப்பை குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தை காட்டிலும் இயேசுவின் வருகையை குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களே அதிகம் என்று வேதாகம பண்டிதர்கள் கூறுகிறார்கள். இப்படியிருக்க கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிற இந்நாட்களில் இயேசுவின் வருகையை குறித்தும் பிறருக்கு சொல்ல முயற்சி செய்யுங்கள். இயேசு சொன்னார் இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:12) என்பதாக. வெளி 1:7 சொல்லுகிறது இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென் என்பதாக.

தேவாட்டுக்குட்டியாய் வந்தவர், யூதா கோத்திரத்து சிங்கமாய் மீண்டும் வருவார். கழுதையின்மேல் கண்ணீரோடு பயணம் செய்தவர், மீண்டும் வரும்போது வெள்ளை குதிரையின் மேல் ஏறி நீதியாய் நியாயம் தீர்க்கிறவராய் வருவார். யூதருக்கு ராஜா என்று முட்கிரீடம் சூட்டப்பட்டு இகழப்பட்டவர், இராஜாதி இராஜாவாக கர்த்தாதி கர்த்தராக பொற்கிரீடம் சூட்டப்பட்டவராக வருவார். இயேசு மனிதனாக பிறந்து இப்பூவுலகில் வாழ்ந்தபோது அதிகாரிகள், ராஜாக்கள் எல்லாரும் இயேசுவுக்கு எதிராக ஆலோசனைபண்ணினார்கள். ஆனால் இயேசு மீண்டும் வரும்போது பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் (வெளி 6:15,16) என்று கூறுவார்கள். ஆகையால் கிறிஸ்துவின் பிறப்பை நினைக்கிற இந்நாட்களில் அவரை குழந்தையாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தாமல், அவரை இராஜாவாக அறிமுகப்படுத்துங்கள். மனிதனாக பிறந்து, பல பாடுகளை சகித்து, மரணத்தை சந்தித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, பரமேறிச்சென்ற இயேசு மீண்டும் வருவார். அவர் வருகையை எதிர்நோக்கி காத்திருப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar