ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம் பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான் (அப். 11:17).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mjhgIKEIN3w
அப்போஸ்தலனாகிய பேதுரு விருத்தசேதனமில்லாத புறஜாதி மனுஷரிடத்தில் போய், அவர்களோடே போஜனம் பண்ணி, அவர்களுக்குக் கர்த்தருடைய சுவிஷேசத்தை அறிவித்ததை அறிந்த விருத்தசேதனமுள்ள யூத கிறிஸ்தவர்கள் அவனோடு வாக்குவாதம் பண்ணினார்கள். அவர்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கு மட்டும்தான் இயேசு ஆண்டவர் என்பதாகக் கருதினார்கள். சபை ஆரம்பித்து சுமார் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தபின்னும்; இந்நாட்களில் கூட ஜாதி சபைகள் காணப்படுகிறது, மற்றவர்களை அங்கீகரித்து, தம்மைப் போலக் கருதுவதற்குப் பதிலாக, தாங்கள் விட்டுவந்த மதங்களில் காணப்படுகிற பழக்கவழக்கங்களை இன்றும் பின்பற்றுகிற கிறிஸ்தவர்கள் திரளாக உண்டு. கர்த்தருடைய பிள்ளைகளே உங்களுக்குள்ளாய் இப்படிப்பட்ட பிரிவினைகள் ஒருபோதும் காணப்படலாகாது. அது தேவனுடையப் பார்வையில் பாவமாய் காணப்படுகிறது.
பேதுரு மற்ற யூதர்களுக்கு ஒத்த சுபாவம் உடையவனாய் காணப்பட்ட, தன்னைக் கர்த்தர் எப்படி ஒரு தரிசனத்தின் மூலம் மாற்றினார் என்பதை அவர்களுக்கு வரிசையாய் விவரித்தான். நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரே தரிசனத்தை மூன்றுமுறைக் கண்டேன், அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. அதிலே நான் உற்றுப்பார்த்து கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப்பறவைகளையும் கண்டேன். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி வந்தது. உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்து நின்றார்கள். நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடோ கூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். கொர்நேலியுவின் வீட்டில் போய் அங்கே கூடியிருந்தவர்களுக்கு சுவிஷேசத்தை பிரசங்கித்த வேளையில் ஆவியானவர் அவர்கள் மேல் இரங்கி எல்லாரையும் அபிஷேகித்தார், ஆகையால் நம்மைப் போல அபிஷேகத்தைப் புறஜாதிகளுக்கும் அநுக்கிரகம் பண்ணின கர்த்தரைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான். கர்த்தர் இப்படிப்பட்ட தரிசனங்களை இந்நாட்களில் பிரிவினையின் எண்ணங்களோடு காணப்படுகிற ஊழியர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கொடுப்பாரேயென்றால் நலமாயிருக்கும்.
கர்த்தருடைய பிள்ளைகளே, பேதுரு தேவனுடைய இருதயத்தைப் புரிந்து கொண்டு, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்ததைப் போல, கர்த்தருடைய இருதயத்தையும், விருப்பத்தையும் உணர்ந்து அவர் பணியைச் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். இந்நாட்களில் ஊழியங்கள் கனியற்றதாயும், பலனற்றதாயும் காணப்படுவதற்குக் காரணம் கர்த்தரை நாம் புரிந்து கொள்ளாததே காரணம். அவர் பாதையைத் தெரிந்து கொண்டு அதன் வழியாய் ஓடுவதற்குப் பதிலாக, நம்முடைய வழிகளில் கர்த்தர் வரவேண்டும் என்;று அவருக்கு ஆலோசனைக் கொடுக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இன, மொழி, தேசம் என்ற அடையாளங்களை வைத்து, ஜனங்களைப் பிரித்து, சபை வளர்ச்சிக்கும் தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்கும் தடையாய் காணப்படுகிறோம். ஆகையால் தேவன் பட்சபாதமில்லாதவராய் இருப்பதைப் போல் அவருடைய சீஷர்களாகிய நாமும் காணப்படுவோம். அப்போது கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae