பாரம்பரியமா? தேவனுடைய கற்பனையா? (Traditions or The Commandments).

அப்பொழுது,    எருசலேமிலிருந்து வந்த  வேதபாரகரும்  பரிசேயரும்  இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? (மத். 15:1-3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IsGM0ahGmqQ

பாரம்பரியம் என்பது முன்னோர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட முறைமைகளாய் காணப்படுகிறது,    ஆனால் தேவனுடைய கற்பனைகள் என்பது ஆவியானவரால் கொடுக்கப்பட்டது. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்,    எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,    அவைகள் உபதேசத்துக்கும்,    கடிந்துகொள்ளுதலுக்கும்,    சீர்திருத்தலுக்கும்,    நீதியைப் படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது  என்று 2 தீமத்தேயு 3:16,   17ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் நாட்களில் காணப்பட்ட வேதபாரகர்கள்,    பரிசேயர்கள் எல்லாரும் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கைகழுவாமல் போஜனம் பண்ணுவதைக் குற்றமாய் பார்த்தார்கள். அவர்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை  அவமாக்குகிறவர்களாய் காணப்பட்டார்கள். இந்நாட்களிலும் வேத வார்த்தையைப் பார்க்கிலும் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைக்கிற ஒரு கூட்டம் காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் பாரம்பரியமாய் எதைச் செய்து கொண்டு வருகிறார்களோ,    அதையே தொடர்ந்து செய்கிறவர்களாய் காணப்படுவார்களே ஒழிய,    வேதத்தில் அதற்கு அத்தாட்சி காணப்படுகிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே,    பாரம்பரியம் ஒருநாளும்  நம்மைப் பரலோகம் கொண்டு சேர்ப்பதில்லை,    என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்று ஆண்டவர் கூறியிருப்பதை மறந்து போகாதிருங்கள்.


பாரம்பரியத்தை ஏன் முக்கியப்படுத்துகிறோம் என்றால்,    மனுஷர்களுடைய அங்கீகாரத்தை நாம் அதிகமாய் விரும்புகிறோம்.  தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்புகிறவர்கள் இந்நாட்களில் திரளாய் உண்டு. என் உறவினர்கள் என்ன நினைப்பார்கள்,    என்னுடைய சமுதாயம் என்ன நினைக்கும்,    கல்யாணத்திற்கும்,    கல்லறைக்கும் எங்கே போவேன் என்று யோசிப்பார்கள்.  ஆனால் கர்த்தர் என்னைக் குறித்து என்ன நினைப்பார் என்று கவலைப்படுவதில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தருடைய அங்கீகாரத்தை அதிகமாய் விரும்புங்கள். ஆண்டவர் மோசேயைக் குறித்துக் கூறும் போது,    அவனைச் சாந்தகுணமுள்ளவனென்றும்,    என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்றும் கூறினார். தாவீதைக்  குறித்து என்னிருதயத்திற்கு ஏற்றவன்,    எனக்குச்  சித்தமானவைகளைச் செய்கிறான் என்றார். யோபுவைக் குறித்து,    உத்தமனும் சன்மார்க்கனும்,    தேவனுக்குப் பயந்து,    பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருக்கிறான் என்றார். நாத்தான்வேலைக் குறித்து கபடமற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். உங்களையும் என்னையும் குறித்து கர்த்தர் எதைக் கூறுவார்? அதுதான் முக்கியமாய் காணப்படுகிறது.  மனிதர்களையும்,    தேவனையும்  ஒருமித்துப் பிரியப்படுத்த முடியாது. மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. ஆகையால் இந்த பண்டிகைக் காலங்களில் கர்த்தருடைய கற்பனைகளுக்கு  கீழ்ப்படிய உங்களை முழுவதுமாய் அர்ப்பணியுங்கள். அப்போது உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும் படிக்குக் கர்த்தர் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae