லுக் 1:26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UFDNbEkcNLY
இயேசுவின் பிறப்பில் தேவ தூதர்களின் பங்களிப்பு மீண்டும் மீண்டும்
இருந்ததை வேதாகமத்தின் மூலமாக வாசித்து அறிந்து கொள்ளலாம். மரியாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்ற செய்தியை அவளுக்கு தெரியப்படுத்த ஆண்டவர் தூதர்களை பயன்படுத்தினார். இன்றும் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்கிற தம்முடைய ஊழியாகர்களின் மூலமாக கர்த்தர் ஜனங்களோடு கூட பேசுகிறவராய் காணப்படுகிறார். காபிரியேல் என்னும் தூதன் முதலாவதாக தரிசனமாகி அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்ற செய்தியையும், அவர் உன்னதமானவருடைய குமாரன் என்ற செய்தியையும் அவளுக்கு ஆண்டவர் தெரியப்படுத்தினார்.
இரண்டாவதாக, தேவ தூதர்கள் இயேசுவின் பிறப்பை பற்றி கூறியது மரியாளுக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு. கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது (மத் 1:20) என்றான். ஒருவேளை ஆண்டவர் நினைத்திருந்தால் முதலாவது யோசேப்புக்கும் பின்பு மரியாளுக்கும் இயேசுவின் பிறப்பை குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம். யோசேப்பு எவ்வளவு நீதிமானாக நடந்துகொள்ளப்போகிறான் என்று சோதித்து அறிவதற்கு முதலாவது மரியாளுக்கும் பின்பு யோசேப்புக்கும் ஆண்டவர் தூதன் மூலமாக இயேசுவின் பிறப்பை குறித்து தெரியப்படுத்தினார். ஆகையால் நாமும் யோசேப்பை போல நீதிமானாக வாழ வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுள்ளவராய் காணப்படுகிறார்.
மூன்றாவதாக, இயேசுவின் பிறப்பை குறித்து ஆண்டவர் தூதர்கள் மூலமாக சொன்னது மேய்ப்பர்களுக்கு என்று லுக் 2:9 -13 வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை தூதர்கள் மேய்ப்பர்களுக்கு சொல்லுகிறவர்களாய் காணப்பட்டார்கள்.
பின்பு தொடர்ச்சியாக இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் தூதர்களின் பங்களிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் என்று தூதர்கள் யோசேப்பிற்கு தெரியப்படுத்தினார்கள். இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட பின்பு தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள் (மத் 4:11). இயேசு சிலுவைக்கு நேராக போவதற்கு முன்பாக கெத்சமனே தோட்டத்தில் வியாகுலத்தோடு பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான் (லுக் 22:43). இப்படி இயேசுவின் பிறப்பிலிருந்து கெத்சமனே தோட்டம் வரைக்கும் தூதர்களின் பங்களிப்பு இருந்தது.
கர்த்தர் உங்களையும் தூதர்களை கொண்டு பாதுகாக்கிறார். உங்களுக்கென்று பணிவிடை செய்ய கர்த்தர் தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்களெல்லாரும் பணிவிடை ஆவிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு காவலாளர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகளை காக்கிறார்கள். ஒருவன் மனம் திரும்பும்போது தேவ தூதர்கள் சந்தோஷமடைகிறார்கள். நம்முடைய பாதம் கல்லில் இடறாமல் காக்க தூதர்களுக்கு ஆண்டவர் கட்டளையிடுவார். இப்படி தூதர்களை கொண்டு பாதுகாக்கப்படுற சிலாக்கியதை கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருப்பது பெரிய பாக்கியமாய் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar