நன்றியின்மை (Unthankfulness):-

ரோம 1:21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mwsaZ602nmE

ரோமர் 1:21-32 வரையுள்ள வசனங்களை வாசிக்கும்போது அங்கே சுமார் மூன்று முறை தேவன் ஜனங்களை எதற்கு ஒப்புக்கொடுத்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார், தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதினிமித்தம் ஜனங்கள் அவலட்சணமான காரியங்களை செய்கிறவர்களாகவும், சுமார் 23 வகையான பாவங்களை செய்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். முடிவில் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று என்று இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் கூறுகிறது. இப்படியாக ஜனங்கள் வீழ்ந்துபோனதற்கு காரணம், அதற்கான வேர் என்ன என்று பார்த்தால், அவர்கள் ஸ்தோத்திரம் செலுத்துகிற சுபாவம் இல்லாதவர்களாய் இருந்தார்கள் என்று வசனம் கூறுகிறது. குறிப்பாக இந்த ஜனங்கள் தேவன் யார் என்பதை அறிந்தும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தாமல் இருந்தார்கள். நமக்குள்ளாக ஸ்தோத்திரம் செலுத்தும் சுபாவம் எப்பொழுதும் இருக்க வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள் (எபே 5:20) என்று வசனம் கூறுகிறது.

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரி 10:13) என்ற வசனத்தின்படி இந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த சோதனைகளை தாங்கும்படியான பெலனை கொடுத்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உலகத்தில் அநேக ஜனங்கள் சோதனைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்தவர்கள் அநேகம். ஆனால் கர்த்தர் உங்களை இம்மட்டும் பராமரித்து நடத்தினார், தப்புவித்தார், கண்ணின்மணிபோல காத்துக்கொண்டார்.

இந்த வருடத்தில் கர்த்தர் உங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து ஒரு குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள். அதில் ஒரு முறுமுறுப்பும் இருக்க வேண்டாம். நீங்கள் கண்ட அதிசயம், அற்புதம், பெற்றுக்கொண்ட ஆசிர்வாதம், பாதுகாப்பு, சரீர நன்மைகள், பாவத்திலிருந்து விடுதலை, சோதனைகளை தாங்க கர்த்தர் கொடுத்த பெலன் என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் நினைவு கூர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுதியவைகள் எல்லாவற்றிற்காகவும் சத்தத்தை உயர்த்தி ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அப்படி நீங்கள் நன்றி செலுத்தும்போது, கர்த்தர் வரும் வருடத்தில் உங்கள் ஆவிக்குரிய, உலகத்துக்குரிய காரியங்களில் அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்வார் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar