பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான் (அப். 10:26).
or audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/88jOdehumrQ
அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனுடைய தரிசனத்தின் படி இத்தாலியா பட்டாளத்தில் நூற்றுக்கு அதிபதியாய் காணப்பட்ட கொர்நேலியுவின் வீட்டில் பிரவேசித்த வேளையில், அவன் எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் உம்மைப் போல ஒரு மனுஷன்தான் என்று கூறினான். அதுபோல அப்போஸ்தலனாகிய பவுல் லீஸ்திராவில் ஊழியம் செய்து கொண்டு வந்த வேளையில், தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல் காணப்பட்ட ஒருவனை நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில் என்று சொன்ன வேளையில் அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனான படியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அங்குக் காணப்பட்ட பூஜாரி எருதுகளையும் பூமாலைகளையும் கொண்டு வந்து, ஜனங்களோடே கூட அவர்களுக்குப் பலியிட்டு அவர்களைத் தொழுவதற்கு மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கண்டு, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்கள் தான் என்றார்கள். வெளிப்படுத்தல் விஷேசத்தில் தேவ தூதன் ஒருவன் பரலோக காட்சிகளையெல்லாம் யோவானுக்கு காண்பித்த வேளையில், யோவான் அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தான், தூதன் அவனை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன் தேவனைத் தொழுதுகொள் என்று கூறினான்.
இந்நாட்களில் தலைவர்களும், மனிதர்களும் தங்களைத் தெய்வங்களாகவும் அவதாரங்களாகவும் காட்டுகிறார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் மற்ற எல்லா மனிதர்களைப் போல மரித்து மண்ணோடு போகிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட காரியங்கள் காணப்படுகிறது. கிறிஸ்தவத்திலும் நாங்களும் பாடுள்ள மனிதர்கள் என்று கூறின அப்போஸ்தலர்களைப் புனிதர்கள் என்று கூறி, அவர்கள் சிலைகளை முத்தமிடுவதும் வணங்குவதும் காணப்படுகிறது. ஊழியர்ளிலும், விசுவாசிகளிலும் சிலர் தாங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களாய் காணப்படுகிறார்கள். ஆண்டவர் கூறினார், நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் என்பதாக. தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர் இயேசு ஒருவரே. அவர் இந்த பூமியில் காணப்பட்ட நாட்களிலும், அவர் ஒருவரே தொழுகைக்கு பாத்திரராய் காணப்பட்டார். குஷ்ட ரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்துகொண்டு, ஆண்டவரே உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள், ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு காற்றையும் கடலையும் அதட்டி அமரப்பண்ணின வேளையில் படவில் உள்ளவர்கள் மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள் என்றும் வேதம் கூறுகிறது. அவர் யாரையும் தடைசெய்யவில்லை, காரணம் அவர் அதற்கு உரியவர். பரலோகத்திலும் அவர் ஒருவரே தொழுகைக்கு பாத்திரராய் காணப்படுகிறார். ஆகையால் வணக்கத்தையும், தொழுகையையும், மனுஷரின் கனத்தையும் இச்சிக்காதிருங்கள். நாம் சாதாரண, பாடுள்ள மனுஷர்கள் என்ற சிந்தையோடு வாழ உங்களை அர்ப்பணியுங்கள், அப்போது தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிற தேவன் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae