கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும், யுத்தம் கர்த்தருடையது, அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் (1 சாமுவேல் 17:47).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9DhHW8zJjC8
பெலிஸ்தியர்கள், இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுவதற்குப் பாளையம் இறங்கினார்கள், சவுல் ராஜாவும், அவனுடைய மனுஷரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுவதற்குப் அணிவகுத்து நின்றார்கள். பெலிஸ்திய சேனையிலிருந்து காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு ராட்சத வீரன் வந்து உங்களில் ஒருவன் வந்து என்னோடு யுத்தம் செய்யட்டும், அவன் தோற்றால் நீங்கள் எங்களுக்கு அடிமைகளாகவேண்டும், நான் தோற்றால் நாங்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகள் என்று நாற்பது நாட்கள் சவால் விடுகிறவனாய் காணப்பட்டான். சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அவனுக்கு முன்பாக கலங்கி, பயந்து காணப்பட்டார்கள்.
இந்த வேளையில் தாவீது இஸ்ரவேலின் பாளையத்திற்குள் தன் சகோதரர்களைப் பார்க்கும்படியாக வந்தான். அப்போது கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் வந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான், அதைத் தாவீது கேட்டான். உடனே தன்னை பாளையத்திற்குக் கர்த்தர் அழைத்துக்கொண்டு வந்ததின் முகாந்தரத்தை அறிந்து கொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் இந்த நாட்களில் இந்த பூமியில் காணப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. நாம் கர்த்தருடைய நாமத்தை அறிந்து, இரட்சிக்கபட்டு, விசுவாசிகளாய் காணப்படுவதற்கு ஒரு முகாந்தரம் உண்டு. தாவீது, சவுல் ராஜாவிடம் போய், நான் இந்த பெலிஸ்தனோடே யுத்தம் பண்ணுவேன் என்று கூறினான். அதற்குச் சவுல் ராஜா நீ இளைஞன், அவனோ சிறுவயது முதல் யுத்த வீரன், உன்னால் அவனோடு யுத்தம் செய்யக் கூடாது என்று சோர்வுண்டாக்கும் வார்த்தைகளைக் கூறினான். பின்வாங்கிப் போன பாத்திரங்களும், தேவ வைராக்கியத்தை இழந்து போனவர்களும், அக்கினி அவிந்து போனவர்களும், உன்னால் கூடாது என்று சொல்லுவார்கள், ஆனால் கர்த்தர், பலவீனன் கூட தன்னை பலவான் என்று சொல்ல வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறவர். தாவீது சவுலைப் பார்த்து, கர்த்தர் அவனோடிருந்து, சிங்கத்தின் மேலும் கரடியின் மேலும் கொடுத்த வெற்றியைக் குறித்துக் கூறினான். எதிரி உங்களுக்கு விரோதமாய் எழும்பும் போது, ஏற்கனவே கர்த்தர் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், கொடுத்த வெற்றிகளையும் அறிக்கையிடப் பழகிக் கொள்ளுங்கள்.
கர்த்தர் பேரில் கொண்ட விசுவாசத்தினிமித்தம் தாவீது கோலியாத்திற்கு விரோதமாய் யுத்தம் செய்வதற்கு அவனுக்கு முன்பாக வந்து நின்று, இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார், நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன், அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள் என்று பெறப்போகிற வெற்றியை, ஏற்கனவே பெற்றுக்கொண்டதைப் போல அறிக்கையிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, விசுவாசத்தை இழந்துபோகாதிருங்கள். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். தாவீது, கோலியாத்தை, தேவன் பேரில் கொண்ட விசுவாசத்தினால் மேற்கொண்டான், கர்த்தர் அவனுக்காக யுத்தம் செய்தார். தாவீதைப் போல விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். யுத்தம் கர்த்தருடையது, ஜெயம் நம்முடையது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar