மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (கலா. 3:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/S3EKlasCSvA
சாபம் என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவாளின் கீழ்ப்படியாமை சாபத்தைக் கொண்டுவந்தது. கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் பிசாசின் தந்திரமான வார்த்தைகளுக்குச் செவிசாய்த்ததினால் சாபம் வந்தது. உபா. 28:15-ன் படி கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் காணப்படும் போது நாம் சாபத்தைச் சம்பாதிக்கிறோம். ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் (1 கொரி. 16:22). காரணமில்லாமல் இட்ட சாபங்கள் தங்குவதில்லை, ஆனால் காரணத்தோடு கூட இட்ட சாபங்கள் தங்கும். விதவைகளை வேதனைப் படுத்தும் போது, திக்கற்ற பிள்ளைகள் அனாதைகளை அலட்சியம் பண்ணும்போது, ஏழைகளை நிந்திக்கும் போது, பூர்வ எல்லைக்குறிகளை மாற்றியமைத்து எளியவர்களை அசட்டைச் செய்யும் போது, லஞ்சம் வாங்கி சம்பாதிக்கும் போது, நீதி நியாயங்களைப் புரட்டும் போது, கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்யும் போது சாபங்களை சேர்க்கிறோம்.
சாபம் வேதனைகளைக் கொண்டு வரும், முட்களைப் போலக் குத்தும், பாடுகள் உபத்திரவங்கள் கஷ்டங்களுக்கு உட்படுத்தும். சாபம் தலைமுறைகளைத் தொடர்ந்து பிடிக்கும். எல்லா வித சாபங்களிலிருந்தும் உங்களை விடுதலையாக்குவதற்கு இயேசு சாபமானார். சாபத்திற்கு அடையாளமான முட்களையும் தன் தலையின் மேல் ஏற்றுக்கொண்டார். இயேசு முற்றிலும் பாவமறியாதவர், அவரை பிதாவாகிய தேவன் நமக்காகக் கல்வாரி சிலுவையில் பாவமாக்கினார். இயேசு உங்களுடைய அக்கிரமங்கள் மீறுதல்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து நித்திய மீட்பை உண்டுபண்ணினார். உங்களை மீட்டெடுப்பதற்கு தம்மையே கிரயமாகக் கொடுத்தார். சிலுவையில் உங்களுக்காக உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதனால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள், மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார் (எண். 21:5-8). அப்படியே இஸ்ரவேல் ஜனங்கள் நோக்கிப் பார்த்து பிழைத்தார்கள்.
சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, மனந்திரும்பி, அவருடைய இரத்தத்தால் பாவங்களற கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, அவருடைய பிள்ளைகளாய் மாறுவது தான் சாபங்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி. என்னை நோக்கிப் பார்த்துப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை (ஏசா.45:22) என்றும் கூறுகிறார். அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து அவரை நோக்கிப்பார்த்தால் பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கர்த்தர் கொடுக்கிறார். அதன் பின்பு சாபங்கள் நம்மைத் தொடர்வதில்லை. அதற்குப் பதிலாக, கலாத்தியர் 3:14-ன் படி, ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவின் மூலம் நமக்கு வரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar