தியானிக்கையில் அக்கினி மூண்டது(My heart grew hot within me, while I meditated):-

சங் 39 : 3. என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WkuHOfDL0gA

வேத வசனங்களை தியானிக்கையில் நமக்குள் அக்கினி பற்றியெரியும். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1 : 2 ).

பொதுவாக அறிவியல் சொல்கிறது ஒரு மனிதன் ஐந்து நாளைக்கு மேலாக தண்ணீர் குடிக்காமலிருந்தால் அவன் மரித்துப்போய்விடுவானென்று. ஒரு மாதம் உணவு சாப்பிடாமல் ஒரு வேளை உயிரோடிருந்துவிடலாம்; ஆனால் தண்ணீர் குடிக்காமல் ஐந்து நாளைக்கு மேலாக நாம் உயிர்வாழ முடியாது. இருப்பினும் மோசே என்ற பக்தன் நாற்பது நாட்களாக மலைமேல் ஏறி ஒன்றும் குடிக்காமலும் சாப்பிடாமலும் இருந்தான். அந்த நாற்பது நாட்களும் மோசே கர்த்தருடைய வசனத்தை பெற்றுக்கொள்ள தியானமாயிருந்தான். ஆண்டவருடைய வார்த்தையை பெற்று கொண்டு அவன் திரும்பிவரும்போது அவன் முகம் பிரகாசமாயிருந்தது என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மனிதன் ஒன்றும் சாப்பிடாமல் அவ்வளவு பிரகாசமாக எப்படி இருந்தான். காரணம் அவன் கர்த்தருடைய வசனத்தை தியானித்து விட்டு வந்தான்.

உங்கள் இருதயம் அனல்கொண்டு எறியவேண்டுமா? அப்படியென்றால் கர்த்தருடைய வசனத்தை தியானியுங்கள். கர்த்தருடைய வசனத்தை தேடி வாசியுங்கள். வசனத்தை தியானிப்பதென்றால் அதைக்குறித்து அசைபோடுவது. அசைபோடும்போது கர்த்தர் வெளிப்பாடுகளை கொடுப்பார். வேதத்தை படித்து வேத அறிவுகளை பெருக்கிக்கொள்ளலாம்; ஆனால் அதே வேளையில் வசனத்தை குறித்த வெளிப்பாடுகளை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். ஆகையால் தான் ஆண்டவர் சொன்னார் இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு (உபாக 6 : 6 – 7 ) என்பதாக.

பிரச்சனைகளை பற்றியே பேசிகொண்டிராமல் வசனத்தை பேசுங்கள் அவருடைய வசனம் சமூலமும் சத்தியம். வசனத்தை பேசுங்கள் காரணம் அதோடுகூட தான் அவர் உடன்படிக்கை பண்ணுகிறார்.

என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து (நீதிமொழிகள் 7:1 ) என்ற வசனத்தின்படி அவருடைய வார்த்தையை இருதயத்தில் பத்திரப்படுத்துங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை அனல் மூண்டு எழும்பச்செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org