யுத்த நாளிலே முதுகைக் காட்டாதிருங்கள்  (Don’t turn back in the day of battle).

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள் (சங். 78:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WjANteRsizo

ஆவிக்குரிய யுத்த காலத்தில் காணப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய் கர்த்தருடைய ஜனங்கள் காணப்பட வேண்டும்.   பவுல்  விசுவாசத்தில் தன் உத்தம குமாரனாகிய திமத்தேயுவுக்கு,    நீ இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாய் காணப்படு என்று எழுதினார். வேதத்தை வாசிக்கும் போது,    சிலர் யுத்தம் துவங்குவதற்கு முன்பே தளர்ந்து போய் பின்வாங்கி விட்டார்கள். சிலர் யுத்தம் துவங்கின நேரத்தில் பின்வாங்கி விட்டார்கள். சிலர் ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில் அஜாக்கிரதையாய் காணப்பட்டார்கள். சபை மக்கள் ஒன்றித்து நின்று யுத்தம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.  நமக்கு ஒரு பொதுவான எதிரி உண்டு,    அவன் பொல்லாத பிசாசு,    அவன் விசுவாசிகளின் ஒருமனதைக் கெடுக்கிறவன்,    அவனை வேதம் சிதறடிக்கிறவன் என்று அழைக்கிறது. அவனுடைய தந்திரங்களை முன்னறிந்து,    அவனுக்கு எதிர்த்து நிற்கும் போது அவன் ஓடிப்போவான். ஆண்டவர் சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்,    சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும்  நமக்கு அதிகாரங்கொடுத்திருக்கிறார்,    ஒன்றும் நம்மை சேதப்படுத்துவதில்லை.

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் எப்பிராயீம் கோத்திரம் ஒரு பெரிய கோத்திரம். யோசேப்பின் மூத்த குமாரன் மனாசே,    இளைய குமாரன் எப்பிராயீம்,    இவர்கள் இரண்டு பேரும் அவனுக்கு எகிப்தில் பிறந்தவர்கள். யாக்கோபு எகிப்திற்கு போனவேளையில் இளையவனாகிய எப்பிராயீமின் மேல் தன் வலக்கரத்தை வைத்து ஆசீர்வதித்து அவனை முன்னிலைப் படுத்தினான். இஸ்ரவேலின் கோத்திரங்கள் இரண்டாகப் பிரிந்த பின்பு,    வடபகுதியில் காணப்பட்ட பத்து கோத்திரங்களும் இணைத்து இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டார்கள். சில வேளைகளில் கர்த்தர் எப்பிராயீம் என்று அழைக்கும் போது,    அது இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களையும் குறிப்பதாகவும் காணப்படுகிறது. எப்பிராயீம் ஒரு தனி கோத்திரமாய் யுத்தநாளிலே எப்பொழுது முதுகு காட்டினார்கள் என்று வேதத்தில் எங்கும் வாசிக்கமுடியவில்லை. ஆனால் அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,    அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,     அவருடைய செயல்களையும்,    அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் முதுகைக் காட்டி தோற்றுப் போனவர்களாய் காணப்பட்டார்கள்.

சவுல் ராஜாவின் நாட்களில் பெலிஸ்தியர்கள் யுத்தத்திற்கு வந்தார்கள். அவ்வேளையில்  கோலியாத்தின் மிரட்டலின் நிமித்தம் சவுல் ராஜாவும்,    இஸ்ரவேலின் சேனையும் முதுகு காட்டி ஓடினார்கள்.  ஆனால் தாவீது ஒருவன் மாத்திரம் எதிர்த்து நின்றான். அவனுக்குள் தேவனைப்பற்றிய வைராக்கியம் காணப்பட்டது. அவன் பெலிஸ்தியனைப் பார்த்து,    நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்,    நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்,     கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும். யுத்தம் கர்த்தருடையது என்று கூறி,     ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும்  பெலிஸ்தனை  மேற்கொண்டு,    அவனை மடங்கடித்து,    அவனைக் கொன்று போட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,    தேவனைக் குறித்த வைராக்கியம் உங்களுக்குள் அதிகமாகக் காணட்டும். கர்த்தருடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் உங்களுக்குள்ளாய் காணட்டும். ஒருவன் ஆயிரம் பேரையும் இரண்டு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவார்கள் என்று வேதம் கூறுகிறது. நாம் ஒன்றித்து ஒரு சேனையாய்,    நம்முடைய சேனாதிபதியாகிய இயேசுவோடு இணைந்து நிற்கும் போது, முதுகைக் காட்டுகிறவர்களாய் அல்ல,    ஜெயமெடுக்கிறவர்களாய்  காணப்படக் கர்த்தர் உதவிசெய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae