திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்(யோவான் 10:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QMdMEnDnpiU
வேதம் பிசாசைச் சோதனைக்காரன், குற்றம்சாட்டுகிறவன், வஞ்சிக்கிறவன், பொய்யன், மனுஷ கொலைபாதகன், கர்சிக்கிற சிங்கம், ஆதிமுதல் பாவஞ்செய்கிறவன் என்று பல பெயர்களில் அழைக்கிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அவனைத் திருடன் என்றும் அழைக்கிறதைப் பார்க்கமுடிகிறது. அவன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறவன், ஆரோக்கியத்தையும், ஐசுவரியத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் திருடுவான். ஏதேன் தோட்டத்தில் தேவனோடு, ஆதிப்பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் உலாவிக்கொண்டிருக்கிறதைக் கண்டு பொறாமை கொண்டான். பின்பு அவர்களைப் பாவத்தில் விழத்தள்ளி, தேவன் அவர்களுக்குக் கொடுத்த ஆளுகையை அவர்களிடமிருந்து திருடிவிட்டான். காயீனுக்குள் புகுந்து அவன் சகோதரனாகிய ஏபேலை கொலை செய்ய வைத்து சாபத்தை சம்பாதிக்குப்படிக்குச் செய்து, சகோதர அன்பைத் திருடிவிட்டான். தாவீதுக்குள் புகுந்து மேட்டிமை கொள்ளும் படிக்குச் செய்து, ஜனங்களை தொகையிடும்படிக்கு வைத்து, அனேகருடைய மரணத்திற்கு அவனைக் காரணமாக்கி, அவனுடைய சமாதானத்தைத் திருடிவிட்டான். ஆகையால் தான் பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள் என்று வேதம் நமக்கு ஆலோசனைக் கூறுகிறது. அவனுக்கு நீங்கள் எதிர்த்து நிற்கும் போது, அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். அவனுடைய தந்திரங்கள் நீங்கள் அறியாதவைகள் அல்ல. இந்நாட்களில் அனேக விசுவாசிகள் கூட, பெருமைகளுக்கும், பொறாமைகளுக்கும், போட்டிகளுக்கும், பிரிவினைகளுக்கும் இடம் கொடுத்து, அவர்கள் அறியாமலே பிசாசைச் சேவிக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள்.
யூதாசையும் வேதம் திருடன் என்று அழைக்கிறது. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனான படியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனான படியினாலும் இப்படிச் சொன்னான் என்று அவனைக்குறித்து யோவான் 12:6ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் சீஷர்களில பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். அவன் பண ஆசையினிமித்தம் முப்பது வெள்ளிக் காசுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்து, சாபத்தை சம்பாதித்து, கடைசியில் நான்று கொண்டு செத்தான். பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. மனுஷன் தேவனைத் திருடலாமா? (Will a man rob God?) என்று வேதம் கேட்கிறது. மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே என்று மல்கியா 3:8ல் எழுதப்பட்டிருக்கிறது. நம்மை அறியாமலே அனேக வேளைகளில் தேவனிற்குரியதைத் திருடுகிற திருடர்களாய் நாம் காணப்படுகிறோம். இயேசு கூறினார்: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்பதாக. களவு செய்யாதிருப்பாயாக என்பது பத்து கட்டளைகளில் ஒன்றாய் காணப்படுகிறது. தேவனுடையதை எடுப்பது, களவு செய்வதற்கு ஒப்பாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, செய்யக் கூடாததைச் செய்வதும், செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவமாகும். நாம் செய்ய வேண்டியவைகளை அனேக வேளைகளில் செய்யாமல் பாவத்தைத் திரளாய் சம்பாதித்து விடுகிறோம். அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எல்லா மனுஷருக்கும்; கட்டளையிடுகிறார். இந்த கர்த்தருடைய வார்த்தை, புறஜாதிகளுக்கு மாத்திரமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பதை அறிந்து, உணர்ந்து கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae