சமாதானமும் பரிசுத்தமுமான வாழ்க்கை (Peaceful and holy life).

எபி 12:14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/usr2VZ4fk6Y

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப்போல நம் வாழ்வில் சமாதானமும் பரிசுத்தமும் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

ஒரு அதிகாரியை அவருடைய சக ஊழியர் எல்லாருக்கும் முன்பாக திட்டிவிட்டார். இது அந்த அதிகாரிக்கு கெளரவ குறைச்சலாக காணப்பட்டு மிகவும் சோர்வடைந்துபோனார். தன்னுடைய ஜெப நேரத்தில், அந்த அதிகாரியிடம் ஆண்டவர் சொன்னார், உன்னை காயப்படுத்தின நபரை என் நாமத்தினால் ஆசீர்வதி என்று சொன்னார். அந்த அதிகாரியும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த நபரை ஆசீர்வதித்தார். உடனே அந்த அதிகாரியின் உள்ளத்தில் தேவ சமாதானம் பெருக்கெடுத்து ஓடியது. தேவனுடைய வசனம், அவருடைய வார்த்தை உங்களுக்கு சமாதானத்தை தரும். யாரையும் கடிந்துகொள்ளாமல், யார்மீதும் கசப்பு இல்லாமல், உங்கள் சமாதானத்தை பிசாசு திருடிவிட அனுமதியாமல், எல்லாரையும் மன்னிக்கிற சுபாவத்துடன் காணப்படுங்கள். எந்த ஒரு சத்தமும் இல்லாத இடத்தில் வசிப்பதும், மாளிகைகளில் வசிப்பதும் தான் சமாதானமான வாழ்க்கை என்று தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள கூடாது. உண்மையான சமாதானம் கர்த்தரால் அவருடைய ஜனங்களுக்கு அருளப்படுவது. இயேசுவுக்கு இன்னொரு பெயர் அவர் சமாதான கர்த்தர். அவர் சொன்னார் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு விட்டு சொல்லுகிறேன் என்பதாக. உலக தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்தை விட்டு செல்லலாம், வீட்டை விட்டு செல்லலாம், வாகனத்தை விட்டு செல்லலாம், இடங்களை விட்டு செல்லலாம். ஆனால், இயேசுவை தவிர வேறொருவரும் தன் பிள்ளைகளுக்கு சமாதானத்தை விட்டு செல்ல முடியாது. இயேசு உங்களுக்கு விட்டு சென்ற சமாதானம் உலகத்தால் தரக்கூடாத சமாதானம். உலகத்தில் எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் இயேசு கொடுக்கிற சமாதானத்திற்கு ஈடு இணையாக ஒன்றையும் சொல்லமுடியாது. என்னுடைய வாழ்க்கை இருளடைந்து போயிருக்கிறது, வீட்டில் எப்பொழுதும் சண்டை ஏற்படுகிறது என்று சொல்லுகிறவர்கள், சமாதான கர்த்தரை அண்டி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்கு மெய்யான சமாதானத்தை தருவார். உலகம் கொடுக்கும் பொய்யான சமாதானத்தை நாடாமல், இயேசு கொடுக்கிற மெய்யான சமாதானத்தை நாடுங்கள்.

அதுபோல பரிசுத்தமான வாழ்க்கை வாழ நாடுங்கள். இந்த உலகத்தில் எல்லாரும், ஏதாவது ஒருவிதத்தில் தவறுகிறோம். மிகப்பெரிய அப்போஸ்தலன் பேதுரு நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைக்கத்தக்கதாக (1 பேது 2:24) என்று சொல்லி நாம் என்ற வார்த்தையோடு அவனையும் இணைத்துக்கொள்ளுகிறான். இயேசுவோடு இருந்த சீஷன், இயேசுவோடு அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்த அப்போஸ்தலன் யோவான், தன்னுடைய முதிர் வயதில், அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள் (1 யோவா 3:5) என்று நம்முடைய என்ற வார்த்தையை சொல்லி தன்னையும் ஒரு பாவி என்று எல்லோரோடும் இணைத்துக்கொள்ளுகிறான். இவர்களெல்லாரும் தங்கள் வாழ்க்கையில் தடுமாறினாலும், பூரணத்தை நோக்கி, பரிசுத்தத்தை நோக்கி நடந்தவர்கள். வாழ்க்கையில் பணம் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று எல்லா இடங்களையும் நாடி அலைகிறவர்களாக காணப்படுகிற கோடிக்கணக்கான ஜனங்களை காட்டிலும், முதலாவது பரிசுத்தமாய் வாழ்வதற்கு நாடுங்கள். அப்பொழுது நீங்கள் தேவனை தரிசிப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org