உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள், எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள் (1 ராஜா. 10:8).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SEwE0TzX-v0
சேபாவின் ராஜஸ்திரீ, சாலொமோனைக் குறித்துக் கூறின வார்த்தைகளாய் காணப்படுகிறது. சேபா என்பது ஏமன் அல்லது எத்தியோப்பியா தேசத்தைக் குறிக்கிறது. இந்த இரு நாடுகளும் இந்நாட்களில் அருகில் காணப்பட்டாலும் ஏடன் வளைகுடா அவைகளைப் பிரிக்கிறது. அவள் விடுகதைகளினால் சாலொமோனை சோதிக்கிறதற்காக வந்து, தன் மனதிலிருந்த எல்லாவற்றையுங் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவற்றையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக் கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சாலொமோனுடைய ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, உம்முடைய ஞானத்தின் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை, நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது, உம்முடைய சமூகத்தில் நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஜனங்களும் ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள் என்றாள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு சாலொமோனைக் காட்டிலும் பெரியவர். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் (மத். 12:42) என்று இயேசு கூறினார். ஒரு நாள் நாம் பரலோகத்தில் அவருடைய சமூகத்தில் நிற்கும் போது, அவரைக் குறித்து நாம் அறிந்தவைகள் கொஞ்சம் என்பதைப் புரிந்து கொள்வோம். இந்த பூமியில் சாலொமோனுக்கு முன்பாக நிற்கிற ஜனங்கள் பாக்கியவான்கள் என்றால், இயேசுவுக்கு முன்பாக நிற்கிற நாம் அதிக பாக்கியவான்களாய் காணப்படுகிறோம். சாலொமோனை சேவிப்பவர்கள் பாக்கியவான்களாய் காணப்படுவார்களானால், இயேசுவைச் சேவிக்கிற நாம் அதிக பாக்கியவான்கள் என்பதில் சந்தேகமில்லை. சேபாவின் ராஜஸ்திரீ சுமார் ஆயிரத்து ஐந்நூறு மைல் தொலைவிலிருந்து சாலொமோனைத் தேடி வந்தாள். நீங்களும் இயேசுவின் சமூகத்தை அதிகமாய் தேடுங்கள். இந்த நாட்கள் இயேசுவைக் கண்டடையத்தக்க கிருபையின் காலம் என்பதை உணர்ந்து இன்னும் அதிகமாய் அவர் சமூகத்தை தேட உங்களை அர்ப்பணியுங்கள். இயேசுவை உங்களுக்கு முன்பாக எப்பொழுதும் நிறுத்தி நோக்குங்கள். என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான் என்று (நீதி. 8:34) ஆண்டவர் கூறினார். இயேசுவோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள், அவரோடு நெருங்கி ஜீவிப்பதை அதிகமாய் வாஞ்சியுங்கள்.
இந்நாட்களில் காணப்படுகிற ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் எல்லாம் ஆண்டவருக்கு நாம் கொடுக்கிற நேரத்தை வஞ்சிக்கிறது. அவைகளினால் பிரயோஜனமும் உண்டு, ஆனால் அவைகளைச் சரியாய் கையாளவில்லை எனில் அவைகள் நம்மை ஆண்டவரை விட்டுப் பிரிக்கும் சாத்தானுடைய கருவிகளாகவும் மாறிவிடும். கர்த்தரோடும், அவருக்காகவும் செலவழிக்கும் நேரங்கள் ஒருநாளும் வீணாய்ப்போவதில்லை. அவருடைய சமூகத்தை வாஞ்சியுங்கள், அவருடைய பாதத்தில் அமருங்கள், பரிசுத்தவான்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள், சபை கூடிவாருங்கள், இவை உங்களைப் பாக்கியவான்களாகவும், பாக்கியவதிகளாகவும் மாற்றும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae