சிலுவை எதை குறிக்கிறது? (What does the cross represent?).

கலா 3:13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nqiu9Gl0HDM

சிலுவை, ரோமானியர்கள் பயன்படுத்திய மோசமான மரண தண்டனை. இது மோசமான குற்றவாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மரணதண்டனையின் வேதனையான வடிவமாகும். டெல்லி பட்டணத்தில் ஒரு மாணவியை பெரிய கும்பல் கற்பழித்து, கொலை செய்த சம்பவம் முழு தேசத்தையும் அசைத்து. இவர்கள் தான் மோசமான குற்றவாளி என்று அழைக்கப்படுகிறார்கள். தீவிரவாதத்தை வளர்த்து அப்பாவி ஜனங்களை கொன்று குவித்த தீவிரவாதிகள் தான் கொடூரமான குற்றவாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தமுள்ள இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட மோசமான தண்டனை தான் சிலுவை மரணம். கற்பனை செய்து பார்க்க முடியாத அவமானமான மரணம் தான் சிலுவை மரணம். இதையே இயேசு உங்களுக்காக சகித்தார்.

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1 பேது 1:19) என்று வசனம் கூறுகிறது. சிலுவை உங்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க கிறிஸ்து செலுத்திய விலையின் சின்னமாகும். பாவம் ஆதாம் மூலம் உலகில் நுழைந்தது, அனைத்து மனித இனத்தையும் பாவத்திற்கு இழுத்து சென்றது. தேவன் உங்களை நேசித்ததால், உங்கள் பாவத்திற்கான விலையைச் செலுத்த அவர் தம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார். உங்களுடையது மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் தன் மகனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு தேவன் அனுப்பினார். பாவமற்ற கிறிஸ்து நம்மை இரட்சிக்க பாவியான நமக்காக சிலுவையில் மரித்தார்.

கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது (பிலி 1:29) என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் அர்ப்பணிப்பின் ஒரு சின்னமாக சிலுவையை பயன்படுத்தினார். கிறிஸ்துவின் நிமித்தம் சித்திரவதை, ஏளனம், அவமானம் மற்றும் மரணம் உட்பட எதையும் அனுபவிக்கத் தயாராக இருக்கும் அர்ப்பணிப்பு வேண்டும் என்பதை சிலுவை நமக்கு தெரிவிக்கிறது. மாத்திரமல்ல, சிலுவை அவருடைய அன்பை தெரிவிக்கிறது. இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதற்கான எல்லையை ஒருவராலும் அளவிட முடியாது.

இப்படி சிலுவை தெரிவிப்பது அநேக காரியங்கள். கடைசியில் சிலுவை நமக்கு தெரிவிப்பது கிறிஸ்துவின் இரத்தமும் அவருடைய சிலுவையும் ஒரு விசுவாசியாகிய நீங்கள் அவரில் பெற்றிருக்கும் இறுதியான வெற்றியைக் குறிக்கிறது. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள் (வெளி 12:11) என்ற வசனத்தின்படி சிலுவையில் இயேசு சிந்தின இரத்தமும், வசனமும் நீங்கள் ஜெயமுள்ள வாழ்க்கைவாழும்படியாக செய்திருக்கிறது. சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை. எதை மறந்தாலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மறந்துவிடாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org