இருமனமுள்ளவன் நிலையற்றவன்(Unstable double-minded man):-

யாக் 1:8. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jvVf35fDMME

யார் இந்த இருமனமுள்ளவன்? அவன் தயங்குகிறவன், சந்தேகத்துக்குரியவன், தீர்க்கமாய் இல்லாதவன். அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்(சங் 12:2) என்று வசனம் சொல்லுகிறது. இன்று ஒன்றை சொல்லுவான் நாளை மற்றொன்றை சொல்லுவான். இன்று ஒரு காரியத்தை செய்யவேண்டுமென்று முடிவெடுப்பான் நாளை மற்றொன்றை செய்யலாம் என்று சொல்லுவான். வார இறுதியில் சபைக்கு வருவான் மறுநாளிலிருந்து தன்னுடைய பாவ வாழ்க்கைக்கு சென்று விடுவான். சபையில் வாயார கர்த்தரை துதிப்பான் வெளியே சென்று அதே வாயால் மற்றவர்களை சபிப்பான். இயேசுவை விசுவாசிப்பான் அதே வேளையில் நண்பர்கள் உறவினர்கள் குடும்பங்கள் கூப்பிடுகிறார்கள் என்று விக்கிரக ஆராதனை செய்வான். சபையில் பாவத்தை அறிக்கை செய்வான் வெளியே போய் உலகத்தின் சிற்றின்பங்களினாலும், உலகத்தின் மயக்கத்தினாலும், உலக ஐசுவரியங்களினாலும் அலைக்கழிக்கப்படுவான். அப்படிப்பட்டவனை வேதம் நிலையற்றவன் என்று அழைக்கிறது.

… இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள் (யாக் 4:8) என்று வசனம் சொல்லுகிறது. இப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர்களுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆலோசனை இருதயம் பரிசுத்தமாகவேண்டும். இருதயத்தில் அசுத்தங்கள் குடிகொண்டிருப்பதால் தான் இருமனம் காணப்படுகிறது. அதை சரி செய்துகொள்ள இருதயத்தை இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட ஒப்புக்கொடுத்து எப்பொழுதும் பரிசுத்தத்தில் நிலைத்திருக்கிறவர்களாய் தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.

எலியா ஆகாப் ராஜாவிடம் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். ஆகாப் இராஜா அப்படியே செய்தான். அப்பொழுது எலியா சொல்லுவான் நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்(1 இராஜா 18:21) என்பதாக. ஜனங்களுக்குள்ளாக இரண்டு நினைவுகள் இருந்தது. ஒரு சகோதரன் வேலை செய்யும் தூர தேசத்தில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான் ஞானஸ்னானம் எல்லாம் எடுத்துக்கொண்டான். விடுமுறைக்கு தன் சொந்த ஊருக்கு செல்லும்போது குடும்பத்தினிமித்தம் இருமனமுள்ளவனாக பாகாலை வணங்குகிறவனாக காணப்பட்டான். இப்படிப்பட்டதான இருமனங்களில் இருப்பவர்கள் குந்தி குந்தி நடப்பவர்கள் என்று வசனம் சொல்லுகிறது.

ஆண்டவர் சொல்லுகிறார் நீ அனலாய் இருந்தால் அனலாய் இரு. குளிராய் இருந்தால் குளிராய் இரு. காரணம் குளிர்ந்த நிலையில் இருக்கும் உனக்கு ஆவியானவர் உதவி செய்து அனலுள்ள நிலைக்கு கொண்டுவருவார். ஆனால் நீ இரண்டும் இல்லாமல் வெதுவெதுப்பாய் இருக்காதே. அப்படி வெதுவெதுப்பாய் இருந்தால் வாந்தி பண்ணி போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத் 6:24) என்று வசனம் சொல்லுகிறது.

மாறாக, நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக (உபா 6:5) என்று எழுதியிருக்கிறபடி இருமனங்களை களைத்து முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் கிட்டி சேருங்கள். அப்பொழுது உங்கள் வாழ்நாள் நீடித்திருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org