2 பேது 1:16. நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DDjjHNJa4os
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர், இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாய் இருக்கிறேன் என்று வானத்திலிருந்து உண்டான சத்தத்தை கேட்டவர்கள். இயேசுவின் முகம் மறுரூபம் அடைந்ததை பார்த்தவர்கள். பேதுருவின் மாமியை இயேசு சுகப்படுத்தியது மாத்திரமல்ல, அவர் செய்த நிகரற்ற அற்புதங்களை தன்னுடைய கண்களால் பார்த்தவன் அப்போஸ்தலன் பேதுரு. மாத்திரமல்ல, இயேசு ஒரு ஆத்துமாவிற்காக பல மயில் தூரம் கடந்து சென்ற கரிசனையுள்ளவர் என்பதை கண்ணார கண்டவன்; இயேசுவின் போதனைகள், அவருடைய மனதுருக்கம், அவருடைய சிந்தை எல்லாவற்றையும் கண்ணார கண்டவன்; இயேசு இந்த முழு உலகத்திற்காக பாடுபட்டு, அடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, பிதாவினடத்திற்கு ஏறிப்போனதை கண்ணார கண்டவன்; பிரதானமாக, இயேசு எல்லாவற்றிலும் தன்னை அனுப்பிய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதையே தன்னுடைய குறிக்கோளாய் வைத்ததை தன்னுடைய கண்ணார பார்த்தவன் தான் பேதுரு.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று பேதுரு அறிந்துகொண்டான். பேதுரு மரணத்தை சந்திக்கபோவதற்கு முன்பாக, தான் கண்ணார கண்ட இயேசுவை பிரசங்கியாமல் கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ள போதகர்களும், வேதத்தை புரட்டுபவர்களும், வஞ்சிக்கிற ஓநாய்கள் வருவதைக்குறித்த எச்சரிப்பை அறிவிக்கிறவனாய் காணப்பட்டான்.
தேவ ஜனங்களே, நம்முடைய அப்போஸ்தலர்கள் கண்ணார கண்ட இயேசுவை தவிர, வேறு இயேசுவை, வேறு சுவிசேஷத்தை, வேறு ஆவியை உடையவர்களை ஏற்றுக்கொள்ளாதிருங்கள். கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து, வழிவிலகி போகிற பொல்லாத மார்க்கமாய் நாம் காணப்படலாகாது. அதுமாத்திரமல்ல, இந்நாட்களில் குறிப்பாக வாலிபர்களை வஞ்சிக்கிற ஏராளமான கள்ள ஊழியர்கள் எழும்பியிருக்கிறார்கள். சபைக்குள்ளாக சினிமா பாடல்களை பாடுகிற ஊழியர்கள், சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஆட்டம், தெய்வீக பிரசன்னத்தை உணராத எத்தனையோ கூட்டங்களுக்கு செல்லுகிற கிறிஸ்தவர்கள், வாலிபர்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாத்திரமல்ல, நம்முடைய அப்போஸ்தலர்கள் கண்ணார கண்ட இயேசுவை அவர்களுக்கு காண்பிக்கும் பொறுப்பில் நாம் காணப்படுகிறோம். அதுபோல, இயேசுவின் வருகையையும், அவருடைய வல்லமையையும் உலகத்திற்கு அறிவிக்கின்ற ஜனங்களாக நாம் காணப்படுவோம். பேதுருவுக்குள்ளாக இருந்த தாகம், நமக்குள்ளாகவும் காணப்படட்டும். அப்பொழுது பரோகத்தில் தக்க பலனை நாம் அடைவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org