ஊழியக்காரரின் சுதந்தரம்(The heritage of the servants of the Lord):-

ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yenszEY1CiM

ஆண்டவர் கொடுத்த ஒரு நல்ல வாக்குத்தத்தம். இந்த வாக்குத்தத்தம் எல்லாருக்கும் உரியதல்ல; மாறாக கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு உரியது என்று இந்த வசனம் சொல்கிறது. இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரம் என்று சொல்லி இருப்பதை பார்க்கலாம். கர்த்தருடைய ஊழியக்காரர்களென்றால் சபையை நிறுவி போதகர்களாக இருப்பவர்கள் மாத்திரமல்ல அவர்களோடு கூட சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஊழியத்துக்காக எதை செய்பவர்களாக காணப்பட்டாலும் அவர்கள் ஊழியக்காரர்களே ஆவார்கள். ஒரு வேளை சிலர் நாற்காலிகளை எடுத்துப்போடலாம், சபைக்காக அயராது ஜெபிக்கலாம், சபையில் துப்புரவு வேலை செய்யலாம், இசை கருவிகளை வாசிக்கலாம், சபையின் பொருளாதாரத்தை பார்த்துக்கொள்ளலாம், ஆராதனை நடத்தலாம், வருபவர்களை கவனிக்கலாம், தேநீர் போட்டுக்கொடுக்கலாம், மீடியா ஊழியத்தில் இருக்கலாம், ஒளி மற்றும் ஒலி கருவிகளை பார்த்துக்கொள்ளலாம்; இப்படி யாராக இருந்தாலும் அவர்கள் கர்த்தருடைய ஊழியக்கார்களே ஆவார்கள்.

ஒரு ஊழியக்காரர் இப்படியாக சொன்னார் என்னுடைய ஊழியப்பாதையில் இந்த வாக்குத்தத்தை அநேக முறை சுதந்தரித்திருக்கிறேன்.எனக்கு விரோதமாக ஊழியத்தை இடித்து பேசுபவர்களால் அது தீமைக்கல்ல; சமாதானத்துக்கு ஏதுவாக மாறுவதாகவும், அது தன்னை கிறிஸ்துவை போல மாறுவதற்கு பிரயோஜனமாக இருந்ததென்றும் அவர் சொன்னார்.

இயேசுவையும் அந்நாட்களில் அநேகர் குற்றப்படுத்தினார்கள்; மாத்திரமல்ல அப்போஸ்தலனாகிய பேதுரு மற்றும் பவுல் போன்றவர்களும் இப்படிப்பட்ட பாதையை கடந்து சென்றார்கள். நீங்கள் உண்மையாகவே இயேசுவை பின்பற்றுகிறவர்களாய் இருப்பீர்களென்றால், நீங்களும் மற்றவர்கள் மூலமாக குற்றப்படுத்தபடும் சூழ்நிலை வரும்.அப்படி யாரவது தங்கள் வாயினால் குற்றப்படுத்தினால் அதை குறித்து கவலை பட வேண்டாம். அவர்கள் குற்றப்படுத்திவிட்டு போகட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மறுமொழி பேசாமல் வாய்களுக்கு கடிவாளம் போடுங்கள். கர்த்தரே உங்களுக்காக யுத்தம் செய்யும்படி விட்டுவிடுங்கள். அப்பொழுது உங்களுக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவும் குற்றப்படுத்தப்படும்.

…எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் ( ஏசா 54 : 15 ) என்ற வசனத்தின்படி உங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் உங்கள் பட்சத்தில் வரும்படி கர்த்தர் செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org