என் பாவமல்ல; எங்கள் பாவம் (Not my Sin; But our Sin).

எஸ்றா 9:6. என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4zpv8BDksEo

அநேகர் அதிகமாக ஜெபிக்கிறது, ஆண்டவரே, என்னை ஆசீர்வதியும், என் குடும்பத்தை ஆசீர்வதியும் என்பது. அடுத்தது, ஆண்டவரே, என்னை மன்னியும், என் பாவத்தை மன்னியும், நான் செய்த குற்றத்தை மன்னியும், என் அக்கிரமத்தை மன்னியும் என்பதாகவே இருக்கும். எஸ்றா தாவீதை போல பத்சேபாளை அபகரித்தானா? சாலொமோனை போல அநேக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் வைத்திருந்தானா? சிம்சோனை போல தெலீலாளின் மடியில் படுத்திருந்தானா? மோசேயை போல எகிப்தியனை கொலை செய்தானா? லோத்தை போல மதுபானம் குடித்து பொல்லாத பாவம் செய்தானா? இவைகளுக்கெல்லாம் பதில் இல்லை என்பதே. எஸ்றா துணிந்து பாவம் செய்தான் என்று ஒன்றும் வேதாகமத்தில் எழுதப்படவில்லை. இருந்தாலும் தன் ஜனம் செய்த பாவம் அவனை பாரப்படுத்தியது, அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் பாவத்தை மன்னியும், என் பாவம் மன்னிக்கப்பட்டால் போதும் என்ற எண்ணத்திலிருக்கும் கிறிஸ்தவர்களாகிய எல்லாருக்கும் எஸ்றாவின் இருதயமும் பாரமும் இருக்குமென்றால், இன்றைக்கு பாவங்கள் தேசத்தில் பெருகுவது தடுக்கப்படும் என்று அறிந்துகொள்ள வேண்டும்.

சபையில் ஒரு சகோதரன் செய்த தவறை, எல்லாரிடமும் சொல்லி தம்பட்டம் அடிக்கிறவர்களும், ஒரு சகோதிரி செய்த பாவத்தை வீடு வீடாக போய் புறணி பேசுகிற ஏராளமான கிறிஸ்தவர்களும் மனம் திரும்ப வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நியர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று. இதையறிந்த எஸ்றா வஸ்திரத்தையும் தன் சால்வையையும் கிழித்து, தன் தலையிலும் தன் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தான்(9:3), அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய்(9:4) உட்கார்ந்திருந்தான். ஒருவரும் செய்யக்கூடாத பாவத்தை நாம் செய்து பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ தெரிந்தால், நம் இருதயம் துடிக்கும், கலங்கும், உள்ளத்தில் பயம் வரும், நம் பாவத்திற்காக கதறுவோம். ஆனால் இங்கே எஸ்றா அவன் செய்த பாவத்தினிமித்தம் அல்ல, தன் ஜனங்கள் செய்த பாவத்தினிமித்தம், உள்ளம் உடைந்தவனாய், அவனால் நிற்க கூட பெலனில்லாமல், திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தான்.

எஸ்றா சொல்லுகிறான், ஆண்டவரே, எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று என்பதாக. எஸ்றா 9:7ல் எங்கள், நாங்கள் என்ற வார்த்தையை எஸ்றா அதிகமாக பயன்படுத்துகிறான். எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறான். எஸ்றா 9:13ல் இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில் என்று சொல்லுகிறான். எஸ்றா 10:1ல் அவன் அழுது தாழவிழுந்துகிடந்தான்.

தேவ ஜனமே, நம்முடைய சபைக்காகவும், நம்முடைய ஜனங்களுக்காகவும், நம்முடைய தேசத்திற்காகவும் கண்ணீர் விட்டு ஜெபித்ததுண்டா? நம் ஜனங்கள் பாவம் செய்யும் போது, அவர்கள் பாவத்தை கர்த்தர் மன்னிக்கும்படி அழுது ஜெபித்ததுண்டா? இல்லையென்றால் கர்த்தர் தாமே எஸ்றாவுக்கு இருந்த பாரத்தையும் இருதயத்தையும் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org