நீதியின் வலதுகரத்தினால் தாங்குவார்(God will uphold you with His righteous right hand):-

ஏசா 41:10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/F1FEpQOLUlM

இயேசு நீதியாய் நியாயம் செய்கிறவர் என்று வசனம் சொல்லுகிறது. அவரிடத்தில் ஒரு அநீதியும் இல்லை. அநீதியாய் அவர் யாரையும் நடத்துவதில்லை.

நாம் காலை எழுந்து காலை வணக்கம் சொல்வதற்கும், வகுப்பறையில் இருக்கும்போது ஆசிரியருக்கு வந்தனம் சொல்லும்போதும், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தலைவர்களுக்கோ தேசியகொடிக்கோ வணக்கம் சொல்லும்போதும் வலது கையை தான் உபயோகப்படுத்துகிறோம். வலதுகையில் வணக்கம் செலுத்துவது மற்றவர்களை மதிப்பதாகவும், அவர்களை கௌரவப்படுத்துவதாகவும் இருக்கும். அதுபோல தான் கர்த்தரும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத நம்மையும் மதித்து அவருடைய வலதுகையால் நம்மை தாங்குகிறார்.

விழுந்துவிட்ட நேரங்களிலெல்லாம் கர்த்தர் அவருடைய வலதுகையால் தாங்குவார். ஒரு வாலிப மகன் அவனுடைய வாழ்க்கையில் தவறான நண்பர்களிடம் சேர்ந்து தன்னை தானே பாவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு பாவ பிடியில் வாழ்ந்துகொண்டு வந்தான். அவனால் ஒரு நாள் கூட போதை அருந்தாமல் இருக்கமுடியாது. அவனுடைய பெற்றோர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் விடாமல் அந்த வாலிப மகனுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இவனும் அநேக நேரங்களில் தான் செய்வது தவறென்றும் அந்த பாவ வாழ்க்கையில் இருந்து வெளிவரமுடியாமலும், தன்னை ஒரு இருளின் ஆதிக்கம் சூழ்ந்திருப்பதையும் உணர்ந்த பிறகும் அவனால் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபடவில்லை. இப்படி ஒரு நாள் அவன் குடித்து மிகவும் அதிகமான போதையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரும்போது ஒரு கோரமான விபத்தில் சிக்கி அடிபட்டு செத்தவனை போல விழுந்தான். அவனை மருத்துவமனையில் கொண்டு சிகிச்சை பெறும்படி அவனுடைய பெற்றோர்கள் சேர்த்தார்கள். ஒரு நாள் இரவு மருத்துவமனையில் அவன் தூங்கும்போது ஒரு சொப்பனம் வந்தது. அதில் ஒரு வலதுகரம் தன்னை முழுவதும் சூழ்ந்திருப்பதை போலவும் அந்த வலது கரம் அவனை தாங்குவதை போலவும் கண்டான். ஒரே ஆச்சரியத்தில் இது யாருடைய கரம் என்று கூர்ந்து பார்த்தான். ஒருவேளை மரித்த நம்முடைய மூதாதையர்கள் கரமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு காரியத்தை பார்த்தான் அந்த வலதுகரம் ஆணி பாய்ந்த கரத்தைப்போல இருந்ததை பார்த்தான். ஆணி பாய்ந்த கரம் என்றால் தனக்காக மரித்த இயேசுவின் கரம் என்று கண்டுகொண்டான். மறுநாள் காலையில் விழித்து பார்த்த போது தன்னுடைய அறையில் இருந்த வசனத்தை பார்த்தான். அதில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்பதாக. அன்றே தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தான். கர்த்தர் அவனுடைய படுக்கையை மாற்றினார். மீண்டும் எழுந்தான். பாவ வாழ்க்கையை உதறி தள்ளினான். அன்றிலிருந்து அவனை தாங்கி பிடித்த இயேசுவின் வலதுகரத்தை பிடித்து நடக்க தொடங்கினான். மிக பெரிய மாற்றத்தை அவனுடைய வாழ்க்கையில் இயேசு கொண்டுவந்ததை உணர்ந்து வாழ்நாளெல்லாம் இயேசுவுக்காகவே ஓடினான்.

இயேசுவின் வலதுகரம் நம்மை தாங்கும். விழும்போதெல்லாம் தூக்கிவிடும். எஸ்றாவின் மேல் இருந்த அவருடைய கரம் உங்கள் மேலும் இருக்கும். அவருடைய கரம் நீங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும், ஆசிர்வதிக்கும்.

கர்த்தருடைய வலது கரம் உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org