நான் உன்னை விடுவிப்பேன் (I will deliver you)

நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங். 50:14,15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ZF8z0gOPJVw

ஒரு புதிய மாதத்திற்குள்ளாய் நம்மை அழைத்துக் கொண்டு வந்த தேவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மைச் சுற்றி யுத்தங்களும், கொள்ளை நோய்களும், இயற்கைச் சீற்றங்களினால் வரும் அழிவுகளும், ஆபத்துகளும் காணப்படுகிற இக்காலக் கட்டத்தில், கர்த்தருடைய கிருபையும், தயவும் நம்மை நடத்திக்கொண்டு  வருவதற்காக  ஆண்டவருக்கு துதி, ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்.

ஆசாப், ஒரு திறமையான  இசைக்கலைஞன், நன்கு பாடுகிறவன், மற்றும் இசைக்குழுவின் தலைவனாகவும் காணப்பட்டான்.  வேதம் அவனைத் தீர்க்கதரிசி என்றும் அழைக்கிறது. அவன் பன்னிரண்டு சங்கீதங்களை எழுதியுள்ளான்.   அவன் எழுதிய முதலாவது சங்கீதம், ஐம்பதாவது சங்கீதமாய் காணப்படுகிறது. அவன் தன்னுடைய திறமைகள் யாரிடத்திலிருந்து வருகிறது என்பதை அறிந்தவனாய் காணப்பட்டதினால், அதை அவனுக்குக் கொடுத்த கர்த்தரை, அவைகளினால் மகிமைப்படுத்தினான்.  கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்களுக்கு அனேகத் திறமைகளையும்,  தாலந்துகளையும் கொடுத்திருக்கிறார். ஆகையால் அவைகளை எல்லாம் கொடுத்தவரின் மகிமைக்காகப் பயன்படுத்துங்கள்.

நம்முடைய தேவன், ஆபத்து வேளைகளில் நமக்கு உதவி செய்கிறவர். இக்கட்டான சூழ்நிலைகளில், மனிதர்களால் உதவ முடியாத வேளைகளில் நமக்கு உதவி செய்கிறவர். இஸ்ரவேல் சபை எகிப்திலிருந்து புறப்பட்ட வேளையில், அவர்களுக்கு முன்பு சிவந்த சமுத்திரமும், பக்கவாட்டில் மலைக் குன்றுகளும், பின்பு  பார்வோனின் சேனைகளும் காணப்பட்டது.  அந்தக் கடினமான நிலையில் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அப்போது கர்த்தர் செங்கடலைப் பிளந்து அவர்களுக்கு வழி உண்டாக்கி உதவி செய்தார். ஆகையால் உங்கள் கடினமான எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று எரே.33:3ன் படி வாக்குக் கொடுத்தவர் உங்களை விடுவித்து, உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்வார். 

கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தர் உங்களை ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கும், உங்கள் வேலை ஸ்தலங்களில் காணப்படுகிற நெருக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கும், நீங்கள் அவருக்கு ஸ்தோத்திரப் பலிகளைச் செலுத்துங்கள். நீங்கள் நன்றாய் காணப்படும் போது, கர்த்தர் உங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் ஏற்றதாக நன்றிப் பலிகளைச் செலுத்தி அவரை கனம் பண்ணுங்கள். அத்துடன் உன்னதமானவருக்கு நீங்கள் ஏறெடுத்தப் பொருத்தனை பலிகளைச் செலுத்துங்கள். சிலவேளைகளில் கடினமான சூழ்நிலைகளில் பொருத்தனைகளை ஏறெடுப்போம், ஆனால் நிலைமை சரியானவுடன் அதை நிறைவேற்ற மறந்துவிடுவோம், நீங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்படலாகாது. அதுபோல, கர்த்தர் உங்களை விடுவிக்கும் போது அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்துவதற்கும் மறந்து விடாதிருங்கள். அவரை ஆவியோடும் உண்மையோடும் எப்பொழுதும் சேவிக்க உங்களை அாப்பணியுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேன்மேலும் பெருகப் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae