ஏன் சபை? – சபை கிரயத்திற்குக் கொள்ளப்பட்டது (Why Church? – Church was Purchased)

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள் (அப். 20:28).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KCrcTpa7biY

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபையின் மூப்பர்களுக்குத் தேவனுடைய சகல ஆலோசனைகளில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் அறிவித்த வேளையில் சபையைக் குறித்த மேலான வெளிப்பாட்டைக்  கூறுவதைக் குறித்து மேற்குறிப்பிட்ட வசனம் விளக்குகிறது. இயேசு தம்முடைய சுய ரத்தத்தைக் கல்வாரிச் சிலுவையில் விலையாய் கொடுத்து சபையைச் சம்பாதித்தார். சபை என்பது வெறும் கட்டிடமல்ல, அது மந்தையை, அதாவது ஜனங்களைக் குறிக்கிறது என்றும் அதே வசனம் வெளிப்படுத்துகிறது. மேய்ப்பர்களும், கண்காணிகளும் கர்த்தர் உங்களை நம்பி கொடுத்த மந்தையைச் சரியான விதத்தில் கிறிஸ்துவுக்குள் நடத்துவதற்கு ஜாக்கிரதையாய் காணப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கிறது. சபையின் தலையானவராய், சொந்தக்காரராய் இயேசு காணப்படுகிறார், ஆகையால் சபை கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய வேண்டும்.

ஆதிப்பெற்றோராகிய ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த வேளையில், தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார் என்று ஆதி. 3:21 கூறுகிறது. அப்பொழுதிலிருந்தே பாவங்களுக்காகப் பலி செலுத்தப்பட வேண்டும் என்பதையும், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதையும், ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்வது இரத்தம் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது. பிசாசு ஆதிமுதல் பாவம் செய்கிறவன், ஜனங்களைப் பாவம் செய்யும் படிக்குத் தூண்டுகிறவன், பாவம் என்னும் சிறையிருப்பிலும் அடிமைத்தனத்திலும் ஜனங்கள் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறவன். ஆகையால் இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாய்  வெளிப்பட்டார். அவர் கல்வாரிச் சிலுவையில் சிந்தின இரத்தம் உங்கள் பாவங்கள் இரத்தாம்பரச்  சிவப்பைப் போலக் காணப்பட்டாலும் உறைந்த பனியைப் போலவும், வெண்பஞ்சைப் போலவும் மாற்றுவதற்கு வல்லமையுள்ளது. நாம் வெள்ளியினாலும், பொன்னினாலும் அல்ல, இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்கப்பட்டவர்கள். நம்மை மீட்பதற்கு அவர் கொடுத்த கிரயம் தன்னுடைய சொந்த இரத்தம் என்பதை நினைவில் வைத்து நன்றியோடு வாழுங்கள்.

இயேசு சபை என்னும் கூட்டாக மட்டும் இல்லாமல், தனித்தனியாகவும் நம்மைக் கிரயத்திற்குக் கொண்டிருக்கிறார். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று  அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய  உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் என்று 1 கொரி. 6:19,20 கூறுகிறது. ஆகையால் நாம் கிரயம் செலுத்தி, விலை கொடுத்து வாங்கப்பட்டவர்களாய் காணப்படுவதினால் பரிசுத்த ஜீவியம் செய்வதற்குத்  தனித்தனியாகவும், சபையென்னும் குடும்பமாகவும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

கர்த்தருடைய வருகையில் மணவாட்டி சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, பரலோகத்தில் இயேசுவின் சமூகத்தில் நின்று, நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர், அதாவது விலை கொடுத்து வாங்கினீர் என்று துதிக்கிற நாட்கள் துரிதமாய் வரப்போகிறது. அதுவரை இப்பூமியில் இரட்சிக்கப்பட்ட நாம் இயேசுவுக்குரியவர்கள், விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் என்ற உணர்வோடும், பரிசுத்தத்தோடும், தாழ்மையோடும், கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தும் வாழக் கர்த்தர் உதவி செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae