பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு (To parents raising children)

நீதி 23 : 13 , 14 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/td4k_LFQIsM

பிறந்த குழந்தைகளையும், பின்பு வளரும் பிள்ளைகளையும் செல்லம் கொடுத்துக் கொண்டே அநேக பெற்றோர்கள் அவர்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கான, பிள்ளைகளுக்கான ஒழுங்குமுறை அல்லது கண்டிப்பின் அவசியத்தைப் பற்றி மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இதன் பொருள் என்ன? இது வெறும் லேசான தட்டுதல் அல்ல, மாறாகக் கடுமையான அடி என்பதையே குறிக்கிறது. லேசான தட்டுதலால் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது. ஆனால், “பிரம்பினால் பிள்ளையை அடித்தால் அவன் சாகமாட்டான்” என்று வேதம் கூறுகிறது. அதாவது, இது மிகவும் கடுமையான அடியைக் குறிக்கிறது, ஆனால், அவன் இறந்துவிடமாட்டான், கவலைப்பட வேண்டாம் என்றே இந்த வசனம் கூறுகிறது. இதற்கென்றே அந்த உடல் பகுதியில் தேவன் போதுமான சதையை அமைத்திருக்கிறார். அது அவனைப் காயத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் பாதுகாக்கும். இதுவே தேவனுடைய ஞானம். இப்படித்தான் உங்கள் பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும்போதே அவர்களுக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவன் வளரும்போது அவனது ஆத்துமாவை நரகத்திலிருந்து விடுவிப்பீர்கள். ஆனால், அவனிடம் நீங்கள் அதிக மென்மையாக நடந்துகொண்டால், அவன் வளர்ந்து நரகத்திற்குச் செல்வதையே காண்பீர்கள். அல்லது, கோபத்தினால் அவனை அடித்தால், அப்போதும் அவன் நரகத்திற்குச் செல்லக்கூடும். ஆனால், உங்களைத் தாழ்த்தி, ஒழுங்குபடுத்தும் பிரம்பைப் பயன்படுத்தி, அந்த வலியை அவன் உண்மையாகவே உணரும்படி செய்தால், அவனது ஆத்துமாவை நரகத்திலிருந்து காப்பாற்ற முடியும். நம் குழந்தைகளிடம் காட்டும் அறிவற்ற மென்மையிலிருந்து நாம் விடுபட வேண்டியது எவ்வளவு அவசியம் என்று பெற்றோர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

சிம்சோனின் தகப்பன் சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள். சிறு குழந்தைகளைக் கொண்ட ஒவ்வொரு தகப்பனும் தாயும் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெற்றோர்களுக்கு இது அவசியம். நியாயாதிபதிகள் 13:8-ல், சிம்சோனின் பெற்றோரிடம் ஒரு தேவதூதன் வந்து, சிம்சோனின் பிறப்பைக் குறித்து முன்னறிவித்தார். அப்போது சிம்சோனின் தகப்பனாகிய மனோவா ஜெபம் செய்து, “ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகும் குழந்தையை நாங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுத்தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். தேவனிடம் ஏறெடுக்கப்பட வேண்டிய எவ்வளவு முக்கியமான ஜெபம் இது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.திருமணமான மற்றும் குழந்தைகளைப் பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே, இந்த ஜெபத்தை ஏறெடுங்கள். “ஆண்டவரே, மனோவா ஏறெடுத்த அதே ஜெபத்தை நானும் ஏறெடுக்கிறேன். இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது குறித்த அறிவுறுத்தல்களை எனக்குத் தந்தருளும்” என்று ஜெபியுங்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகளை பாதாளத்திற்கு தப்புவிப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org