இருதயத்தின் அகந்தை (The Pride of Heart )

ஒபதியா 1:3. கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gL2by8BPXZY

பழைய ஏற்பாட்டில் ஒரே ஒரு அதிகாரத்தைக் கொண்ட ஒரே புஸ்தகம் ஒபதியா தீர்க்கதரிசியின் புஸ்தகமாகக் காணப்படுகிறது. ஒபதியா எழுதியது வெறும் 21 வசனங்கள் தான். ஆண்டவர் அவனிடம் பேச ஆரம்பித்தவைகளை அவன் எழுத ஆரம்பித்தான். அவர் எப்பொழுது பேசி முடித்தாரோ, அப்பொழுது எழுதுவதை நிறுத்திவிட்டான். இதுதான் ஒபதியா தீர்க்கதரிசியின் தாழ்மை. இந்நாட்களில் தேவன் பேசாதவைகளையும், தேவன் என்னோடு பேசினார் என்று தம்பட்டம் அடிக்கிறவர்களையும், வேண்டாத கட்டுக்கதைகளை பிரசங்கத்தில் சொல்லி நேரத்தை வீணடிக்கிறவர்களும் உண்டு. ஆனால் ஒபதியா அப்படியில்லை. மாத்திரமல்ல, எரேமியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தவன் தான் இந்த ஒபதியா தீர்க்கதரிசி. மிகவும் அனுபவம் வாய்ந்த தீர்க்கதரிசியாகிய எரேமியா அதிகமாகப் பேச, தான் குறைவாகப் பேச தன்னைத் தாழ்த்திக்கொண்டான். இந்நாட்களில் தேவனுடைய பணியைச் செய்யும் வாலிபர்கள், ஊழியக்காரர்கள், அனுபவமிக்க ஊழியக்காரர்கள் அதிகம் பேச இடம்கொடுத்து தங்களைத் தாழ்த்துகிறவர்களாகக் காணப்பட வேண்டும். ஏதோ இரண்டு மூன்று பாடல்களைப் பாடி, கொஞ்சம் வசனங்கள் தெரிந்தவுடன், நான் இந்த பெரிய ஊழியக்காரரை விட மேன்மையுள்ளவன் என்று நினைக்கிறவர்களை நாம் பார்க்க முடிகிறது. காரணம் அவர்களுடைய இருதயத்தில் அகந்தை காணப்படுகிறது.

இருதயம் திருக்குள்ளதும் கேடுள்ளதுமாய் இருக்கிறது. அநேக வேளைகளில் நமக்குள் பெருமை எந்த ரூபத்தில் வருகிறது என்பதை அடையாளம் கண்டுகொள்ளுவதே சிரமமாகிவிடுகிறது. பெருமைக்கும் தாழ்மைக்கும் நூலிழை தான் வித்தியாசம் என்றார் ஒரு மூத்த ஊழியக்காரர். நம்முடைய செயல்களும், பேச்சும் தாழ்மையாக இருப்பது போல் காணப்பட்டாலும், இருதயத்தின் எண்ணம் அகந்தையைக் காட்டுவதை உணராமல் விட்டுவிடுகிறோம். நம்முடைய தேவன் இருதயத்தின் ஆழங்களை அறிந்தவர். ‘மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்’ என்று பிர 9:3 கூறுகிறது. யார் பைத்தியம்? யாருடைய இருதயத்தில் தீமை காணப்படுகிறதோ, அவர்களுடைய இருதயம் தான் பைத்தியம் என்று வசனம் கூறுகிறது. சங்கீதக்காரன் சொல்லுகிறான், ‘தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்’ (சங் 108:1) என்பதாக. ‘எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்’ என்று ஞானி நீதிமொழிகள் 4:23-ல் கூறுகிறான். உங்கள் இருதயத்தில் அகந்தை ஏற்படாமல் காத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் இருதயத்திலிருந்து ஜீவஊற்று புறப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org